துரை வைகோ - மல்லை சத்யா மோதல்; 20ல் நிர்வாகக்குழு கூட்டம்: வைகோ
துரை வைகோ - மல்லை சத்யா மோதல்; 20ல் நிர்வாகக்குழு கூட்டம்: வைகோ
ADDED : ஏப் 14, 2025 05:51 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரைக்கும், துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே, மோதல் தீவிரம் அடைந்துள்ளது. மல்லை சத்யாவை கட்சியிலிருந்து நீக்க, திருச்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதால், அக்கட்சி இரண்டாக பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அவர்கள் இருவரையும் சமரசப்படுத்த முயற்சித்து வரும் வைகோ, வரும் 20ல் ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் நடக்கும் என அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு குரல்
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை, கட்சியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முக்கிய மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், கட்சியில் இருந்து வெளியேறினர். அப்போது கட்சி துணை பொதுச்செயலர் மல்லை சத்யா வெளியேறாமல், கட்சியிலேயே இருந்தார். தற்போது, அவருக்கும், துரைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து, துரை ஆதரவாளர்கள், மல்லை சத்யாவுக்கு எதிராக குரல் எழுப்ப துவங்கி உள்ளனர்.
திருச்சி நிர்வாகிகள் கூட்டத்தில், அவரை கட்சியில் இருந்து நீக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், ம.தி.மு.க., தொழிலாளர் முன்னணி சார்பில், சென்னை தாயகத்தில் நேற்று முன்தினம் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், புதிய நிர்வாகிகள் நியமனத்தில், முறைகேடு நடந்துள்ளது, ஜாதி அடிப்படையில் பதவி வழங்கப்பட்டுள்ளது என, சில நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து, நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். கூட்டத்திலிருந்து வெளியேறிய துரை, 'கட்சியின் முதன்மை செயலர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
தாயகத்தை விட்டு கோபமாக வெளியேறிய துரையிடம், அவரது ஆதரவாளர் ஒருவர் ஓடி வந்து, 'நீங்க எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; நான் சம்பவம் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறேன்' என்றார். அதை கண்டுகொள்ளாமல் துரை புறப்பட்டு சென்றார். இம்மோதல் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, துரை ஆதரவாளரும், வழக்கறிஞருமான சத்தியகுமாரன் அறிக்கை: ம.தி.மு.க.,வில் 30 ஆண்டுகள் அல்ல; 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, வைகோ, துரை மட்டுமே ம.தி.மு.க.,வின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறி செல்லலாம். ம.தி.மு.க.,வை உடைத்து விடலாம். கட்சியில் பிளவு ஏற்படுத்தலாம்.
தாயகத்தை நெருங்கி விடலாம் என, நினைக்கும் துரோகிகளுக்கு சொல்வேன். வைகோ, துரையின் கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும், பெட்டியை கட்டிக் கொண்டு, வாயை பொத்திக் கொண்டு, வந்தவழியே சென்று விடுங்கள். இது துரையோட காலம் என்பதை எதிரிகளும், துரோகிகளும் உணரும் காலம் வந்துவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திரைப்பட பாணி பதிவு
அதற்கு பதிலடியாக மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கை: ம.தி.மு.க.,வில் 32 ஆண்டுகள் அல்ல; 300 ஆண்டுகள் உழைத்தாலும், நீங்கள், எங்கள் அடிமைகளாக கைகட்டி வாய் பொத்தி இருக்க வேண்டும் என மாமன்னன் திரைப்பட பாணியில் பதிவிட்டுள்ளீர்கள். ம.தி.மு.க.,வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக, புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர்.
'விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த, என்னை குடத்தில் இட்ட விளக்காக, என்னை குன்றின்மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் மோதல் போக்கை கடைப் பிடிப்பதால், அக்கட்சி இரண்டாக பிளவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்கவும், மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், வரும் 20ம் தேதி, ம.தி.மு.க., நிர்வாகக்குழு கூட்டம் தாயகத்தில் நடக்கும் என, வைகோ அறிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

