இ.கம்யூ., மாநில செயலர் தேர்தல்; மோதலை தவிர்க்க தள்ளிவைப்பு
இ.கம்யூ., மாநில செயலர் தேர்தல்; மோதலை தவிர்க்க தள்ளிவைப்பு
UPDATED : ஆக 19, 2025 05:36 AM
ADDED : ஆக 19, 2025 05:31 AM

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது மாநில மாநாடு, கடந்த 15ம் தேதி சேலத்தில் துவங்கியது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, புதிய மாநிலச் செயலரை தேர்வு செய்ய, தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலச் செயலர் பதவி காலம் மூன்று ஆண்டுகள். ஒருவர், மூன்று முறை மட்டுமே தலைவராக இருக்க முடியும். தற்போதைய மாநிலச் செயலர் முத்தரசன், 2015, 2018, 2022 என தொடர்ந்து மூன்று முறை, அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கொரோனா காரணமாக 2021ல் நடக்க வேண்டிய, மாநிலச் செயலர் தேர்தல் 2022ல் நடந்தது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக முத்தரசன், அப்பதவியில் உள்ளார்.
அவரது பதவி காலம் முடிந்து விட்டதால், புதிய மாநிலச் செயலர் தேர்ந்தெடுக்கப்படுவார் என, கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். மாநிலச் செயலர் பதவிக்கு, தற்போது மாநில துணைச் செயலராக இருக்கும் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிர்வாக இயக்குநர் சந்தானம் ஆகியோர், வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தனர்.
கடும் போட்டி இருந்ததால், மூத்த தலைவர்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க முயன்றனர். ஆனால், இரு தரப்பும் விடாப்பிடியாக இருந்தனர். தேர்தல் நடந்தால், மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதைத் தொடர்ந்து மாநிலச் செயலர் தேர்தல், தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கூறியதாவது:
சேலம் மாநாட்டில், 100க்கும் அதிகமான, மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் ஓட்டளித்து, மாநிலச் செயலரை தேர்வு செய்ய வேண்டும்.
மாநிலச் செயலர் தேர்தலை, சுமுகமாக நடத்த முடியாத சூழல் உருவானதால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த, ஒரு மாதத்தில் தேர்தல் நடக்கும். கட்சிக்குள் சுமுகமான சூழலை உருவாக்க, மூத்த தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மாநிலச் செயலர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், சட்டசபை தேர்தல் வரை, செயலராக தொடர முத்தரசன் முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம், அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.