தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/திமுக அன்பில் மகேஷ், முத்துக்குமாரை விசாரிக்க ஈ.டி., அதிகாரிகள் திட்டம்

திமுக அன்பில் மகேஷ், முத்துக்குமாரை விசாரிக்க ஈ.டி., அதிகாரிகள் திட்டம்

திமுக அன்பில் மகேஷ், முத்துக்குமாரை விசாரிக்க ஈ.டி., அதிகாரிகள் திட்டம்


ADDED : நவ 27, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் மீதான, 400 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான ஆவணங்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் பெற்றுள்ள, ஈ.டி., எனப்படும், அமலாக்கத் துறை அதிகாரிகள், கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கடந்த தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ், 48, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார், 47, மற்றும் தி.மு.க., நிர்வாகி அரசகுமார், 58, உள்ளிட்டோர், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக, 400 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்துள்ளதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, அன்பில் மகேஷ், முத்துக் குமார் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள், அன்பில் மகேஷ் அமைச்சராக பொறுப்பேற்ற பின் வாங்கிய சொத்து விபரங்கள் குறித்து ஆய்வு செய்கின்றனர். அதேபோல, முத்துக்குமார், அரசகுமார் பணப் பரிமாற்றம் செய்த, 49 வங்கி கணக்கு விபரங்களையும் ஆய்வு செய்கின்றனர்.

முறைகேடு தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திரட்டி உள்ள ஆவணங்களின் நகல்களை நேற்று பெற்றுள்ளனர். சென்னை தி.நகரில் செயல்பட்டு வந்த, தனியார் நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளனர். அன்பில் மகேஷ், முத்துக்குமார் மற்றும் சரவணன் ஆகியோர், தற்போது சிறையில் இருப்பதால், அவர்களை மீண்டும் கைது செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாக, தி.மு.க., முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, திருநெல்வேலியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி வெங்கடாஜலபதி என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிறையிலடைக்க உத்தரவு


தனியார் பள்ளி கட்டடங்களுக்கு, நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, 400 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கில், அன்பில் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்குமார் மற்றும் 'குளோபல் 360 எஜூக்கேர்' நிறுவன மேலாளர் சரவணன் ஆகியோரிடம், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனித்தனியே விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, மூவரையும் ஒரு நாள் விசாரிக்க, போலீசாருக்கு அனுமதியளித்து, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, நேற்று மாலை விசாரணை முடிந்து, மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முந்தைய உத்தரவு படி, மூவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us