ADDED : மார் 10, 2024 02:39 AM

புதுடில்லி: தெலுங்கானாவில் அமோக வெற்றி பெற்று, சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை தோற்கடித்து ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்; ரேவந்த் ரெட்டி இங்கு முதல்வராக உள்ளார். சமீபத்தில் இவர் பேசிய பேச்சு, காங்கிரசையும், குறிப்பாக ராகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் தெலுங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, மோடியை, 'அண்ணா' என, பாசத்தோடு அழைத்துள்ளார். அதுமட்டுமல்லாது, மோடியின் குஜராத் மாடல் அரசைப் புகழ்ந்துள்ளார்.
இதனால் ராகுல், 'அப்செட்' ஆகியுள்ளாராம். மோடியையும், குஜராத் மாடலையும் கடுமையாக ராகுல் விமர்சித்து வரும் நிலையில், ரேவந்த் ரெட்டி இப்படி மோடியைப் புகழ்ந்திருப்பது கட்சிக்குள் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டில், 1,000 கோடி ரூபாய்க்கு மேலான அரசு வேலைகளை, அதானி குழுமத்திற்கு கொடுத்துள்ளார் ரேவந்த் ரெட்டி.
அதானி, மோடிக்கு நெருக்கம் என அடிக்கடி சொல்லி வருகிறார் ராகுல். இதனால் ரேவந்த் ரெட்டி மீது ஏற்கனவே கடுப்பில் உள்ளார் ராகுல். இப்போது மோடி, ரெட்டிக்கு அண்ணாவாகி விட்டார்.
'மஹாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே போல, காங்கிரசை தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி உடைத்து விடுவார்' என, சொல்ல துவங்கி விட்டார், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ். தெலுங்கான காங்கிரசில், ரெட்டிக்கு எதிரானவர்கள் தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.

