ADDED : ஏப் 19, 2024 11:57 PM

திருவண்ணாமலையில் ஆரணி லோக்சபா தொகுதியில் சேத்துப்பட்டு அருகே கிழக்குமேடு கிராமத்தில், 750 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஓட்டுச்சாவடி 4 கி.மீ., தொலைவில் அமைக்கப்பட்டதால், தேர்தலை புறக்கணித்தனர். அதிகாரிகள் பேச்சுக்கு பின், ஓட்டுப்பதிவு செய்ய சென்றனர்
* திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு எஸ்.டி., ஜாதி சான்றிதழ் தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
* மயிலாடுதுறை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் கோட்டூர் வாக்கு மையம் எண் 114ல், 170 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாததால், வாக்களர்கள் ஓட்டளிக்க முடியாமல் கல்லணை - பூம்புகார் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
* ஓசூரில், தளி, வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிகளில், 250க்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் திருப்பினர்
* திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான குமார், நேற்று காலை ஓட்டளிக்கச் சென்றார். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மையத்திற்குள் படம் எடுக்க அனுமதி இல்லை என்றனர். இதனால், ஓட்டளிக்காமல் அவர் திரும்பினார். பின், பகல், 12:30 மணிக்கு ஓட்டளித்தார்
* தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் 150 வீடுகளில், 650 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஓட்டு போடாமல், தேர்தலை புறக்கணித்தனர்
* ஒரத்தநாடு அருகே பின்னையூர் கிராமத்தில் கணக்கன் தெருவுக்கு செல்லும் பழுதடைந்த நடைபாலத்தை சீரமைக்காததை கண்டித்து, கணக்கன் தெருவை சேர்ந்த 175 வாக்காளர்கள் நேற்று தேர்தலை புறக்கணித்தனர்
* திருவண்ணாமலை, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், எட்டு இடங்களில் ஓட்டுப்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானதால் 1 மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு நடந்தது
* கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் கடவர்ஹள்ளி கிராமம், கருக்கனஹள்ளி ஆகிய கிராமங்களில் வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடியும் நடவடிக்கை இல்லாததால், அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்
* திருப்பூர் மாவட்டம் அன்னுார் அருகே கோபிராசிபுரம், கூலே கவுண்டன்புதுார் கிராமங்களில் குடிநீர் கேட்டு, அப்பகுதியிலர் தேர்தலை புறக்கணித்தனர்
* திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த முனகாடு கிராமத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்து அப்பகுதியினர் தேர்தலை புறக்கணித்தனர்
* சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்துாரணியில் சாலை வசதி இல்லாதது, இளையான்குடி நகர் பகுதி கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக, அந்த கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
* காஞ்சிபுரம் பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர்
* கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நல்லுார் சாலையில் டிரென்ட் சிட்டி என்ற தனியார் லே - அவுட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், தேர்தலை புறக்கணித்தனர்
* சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம், குமாரராஜாபேட்டையில், விளைநிலங்களை கையகப்படுத்தியதை கண்டித்து தேர்தலை புறக்கணித்தனர்
* திண்டுக்கல் மாவட்டம் சின்ன அயன்குள பகுதி மக்கள், அடிப்படை வசதி கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்தனர்.
* புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தேர்தலை புறங்கணித்துள்ளனர்
* கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகே தனி ஊராட்சி கோரிக்கை தொடர்பாக எஸ். எரிப்பாளையம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
- நமது நிருபர் -

