ராஜ்யசபாவில் 56 இடங்களுக்கு தேர்தல்: பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்
ராஜ்யசபாவில் 56 இடங்களுக்கு தேர்தல்: பா.ஜ., கூட்டணிக்கு சாதகம்
UPDATED : ஜன 30, 2024 01:00 PM
ADDED : ஜன 30, 2024 02:27 AM

புதுடில்லி: ராஜ்யசபாவில் காலியாகும் 56 இடங்களுக்கு, பிப்., 27ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பீஹார், மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, இதில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தேர்தல் கமிஷன் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கிடையே, ராஜ்யசபாவில் அடுத்த சில மாதங்களில், 56 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்தல், பிப்., 27ல் நடக்கும் என தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது. பிப்., 8ல் தேர்தல் நடைமுறை துவங்க உள்ளது.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்; பீஹார் மற்றும் மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, ராஜ்யசபாவில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பதவிக்காலம்
காலியாகும் 28 இடங்களை தக்க வைப்பதுடன், கூடுதலாக ஆறு இடங்கள் பா.ஜ.,வுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், ராஜ்யசபாவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன. இவற்றில், 233 இடங்கள் தேர்தல் வாயிலாக நிரப்பப்படுகின்றன. மீதமுள்ள 12 இடங்கள் நியமன உறுப்பினர்களாவர். இந்த 12 நியமன உறுப்பினர்களில், பா.ஜ.,வைச் சேர்ந்த மகேஷ் ஜெத்மலானி, சோனல் மான்சிங், ராம் சகேல், ராகேஷ் சின்ஹா ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலையில் முடிகிறது. இரண்டு இடங்கள் தற்போது காலியாக உள்ளன.
தற்போதைய நிலையில், ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 114 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 93 பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்ததாக காங்கிரசுக்கு 30 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 56 இடங்களில், 50 உறுப்பினர்களின் பதவிக் காலம், ஏப்., 2ம் தேதியும், ஆறு பேரின் பதவிக் காலம், ஏப்., 3ம் தேதியும் முடிவுக்கு வருகின்றன. இந்த 56 இடங்களில், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 10 இடங்கள் காலியாகின்றன. மஹாராஷ்டிரா மற்றும் பீஹாரில் தலா ஆறு, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா ஐந்து இடங்கள் காலியாகின்றன.
கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா நான்கு இடங்கள், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தானில் தலா மூன்று இடங்கள், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, சண்டிகரில் தலா ஒரு இடங்கள் காலியாகின்றன. ஹிமாச்சலில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடப்பதால், அங்கு காலியாகும் இடம் அந்தக் கட்சிக்கு கிடைக்கும். இந்த இடத்தில், பொதுச்செயலர் பிரியங்கா நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இதனால், இந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா, தற்போது வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்து, பா.ஜ., கூட்டணிக்கு, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் திரும்பியுள்ளார்.நேற்று முன்தினம் முதல்வராக அவர் பதவியேற்றார். இதனால், பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரசிடம் இருந்த இரண்டு இடங்கள் பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்கும்.பீஹாரில் காலியாகும் ஆறு இடங்களில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம், தலா இரண்டு இடங்களையும், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலா ஒரு இடங்களையும் வைத்திருந்தன.
கூடுதல் இடங்கள்
இது போலவே, மஹாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் பா.ஜ., கூட்டணி அரசில், சரத் பவாரின் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் இணைந்தார். இதனால், இங்கும் பா.ஜ., கூட்டணிக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் கிடைக்கும். மஹாராஷ்டிராவில் காலியாகும் ஆறு இடங்களில், மூன்று பா.ஜ., வசம் உள்ளது. தேசியவாத காங்., சிவசேனா மற்றும் காங்., தலா ஒரு இடங்களை வைத்துள்ளன.
பா.ஜ., ஆளும் குஜராத்தில் காலியாகும் இரண்டு இடங்கள் தற்போது காங்கிரசிடம் உள்ளன. அந்த இடங்களை பா.ஜ., கைப்பற்றும்.
குஜராத்தில் இரண்டு இடங்கள், பீஹார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு இடங்களை காங்கிரஸ் இழக்கும்.அதே நேரத்தில், தெலுங்கானாவில் ஆட்சியை பிடித்ததால், அங்கு இரண்டு இடங்கள் கிடைக்கும்.
இந்த தேர்தல் முடிவில், பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்பதால், ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவது, அந்த கட்சிக்கு எளிதாக இருக்கும் என தெரிகிறது.