எலி, கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதி; மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்
எலி, கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதி; மருந்து பற்றாக்குறையால் புலம்பும் அலுவலர்கள்
UPDATED : பிப் 20, 2025 07:01 AM
ADDED : பிப் 20, 2025 12:09 AM

சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்த மாநகராட்சி கவனம் செலுத்தாததால், பொதுமக்கள் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எலியும் பெருகி பாடாய் படுத்துவதால், காய்ச்சல், சளி தொல்லையால் மக்கள் திணறும் நிலையில், தொற்று பாதிப்புகளும் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
'மருந்து தட்டுப்பாடு இருப்பதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை' என சுகாதார ஆய்வாளர்கள் புலம்புகின்றனர்.
சென்னையில், கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள் முக்கியமானவை. இவை தவிர, கிளை கால்வாய்களான மாம்பலம், ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் நன்னீரைவிட, கழிவுநீர் தான் அதிகம் ஓடுகிறது.
இதன் காரணமாக, சென்னை மாநகரம் கொசுக்களின் வாழ்விடமாகவே உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், நாளுக்கு நாள் கொசு பெருக்கம் அதிகரித்துள்ளது. கொசு தொல்லையால் இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலை, பேருந்து நிறுத்தங்கள், சிக்னல்களில் நின்றாலும், கொசு கடித்து, மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி பெரிதாக எந்த முயற்சியும் எடுக்காமல் சுணக்கம் காட்டி வருகிறது.
ஏற்கனவே காய்ச்சல், சளி தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், தொற்று நோய் பாதிப்புகளும் ஏற்படுமோ என, அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சாதகமான சூழல்
தற்போது குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், கொசு இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழல் இருப்பதாக, பூச்சியியல் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
இதில், கடித்து தொல்லை கொடுக்கும், 'கியூலெக்ஸ்' வகை கொசுக்கள், அதிகம் இனப்பெருக்கமடைந்து உள்ளன. இந்த வகை கொசுக்கள், காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தும். காய்ச்சலுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிட்டால், நரம்பு மண்டலத்தை பாதித்து, மூளை காய்ச்சலையும் ஏற்படுத்தக்கூடும் என, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
புலம்பல்
இனப்பெருக்கம் அதிகரித்து, கொசு தொல்லை கட்டுப்படுத்த, மாநகராட்சி போதிய அளவில், எம்.எல்.ஓ., என்ற கொசுப்புழு கொல்லி எண்ணெய் தரவில்லை எனவும், அதனால் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், சுகாதார ஆய்வாளர்கள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில், 200 வார்டுகள் உள்ளன. வார்டு அளவை பொறுத்து, ஒரு நாளைக்கு தினமும், 15 முதல் 20 லிட்டர் எம்.எல்.ஓ., மருந்து தேவை. ஆனால், வாரத்திற்கு, 40 லிட்டர்தான் தரப்படுகிறது.
ஒரு வார்டில், 150 முதல் 200 தெருக்கள் வரை உள்ளன. மாநகராட்சி கொடுக்கும் குறைந்த அளவு மருந்து, மூன்று நாட்கள் வரை தான் இருக்கும். அதுவும், பெரிய தெருக்களாக இருந்தால், ஓரிரு தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் மருந்து தெளிக்க முடியும்; புகை பரப்ப முடியும்.
இதில், கொசுப்புழுக்களாக இருக்கும்போது ஓரளவு கட்டுப்படுத்த முடியும். ஆனால், வளர்ந்த கொசுக்களாக இருந்தால், ஒரு பகுதியில் புகை பரப்பினாலும், மற்றொரு இடத்திற்கு பறந்து சென்று தப்பித்து விடும்.
மாநகர் முழுதும் கொசுவை ஒழிக்க வேண்டும் என்றால், ஒரு மாதம், தீவிர கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். அதற்கு போதிய அளவில், மருந்துகளையும் மாநகராட்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எலியும் பெருகிடுச்சு
சென்னையில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் மற்றும் மார்கெட் பகுதிகளில், எலிகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. ஆங்காங்கே தேங்கியுள்ள குப்பையிலும், 'மெகா சைஸ்' எலிகள் கம்பீரமாக உலா வருகின்றன. இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று மாநகராட்சி யோசித்ததாக கூட தெரியவில்லை.
விஷம் வைத்தோ, கூண்டு வைத்தோ கொல்லப்பட்ட எலிகள், சாலைகளில் வீசப்படுகின்றன. இதனால், எலி காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய காலநிலை மாற்றத்தால், அம்மை போன்ற நோய்கள் பரவ காத்திருக்கும் வேளையில், எலி காய்ச்சலும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே துவங்குவது அவசியம்.
- நமது நிருபர் -