கொங்கு மண்டல வளர்ச்சிக்கான ஊக்கம்! திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை!
கொங்கு மண்டல வளர்ச்சிக்கான ஊக்கம்! திறன்மிகு கோவை...திட்டங்கள் தேவை!
ADDED : மார் 29, 2024 06:06 AM

தெற்கு ரயில்வேயில் மொத்தம் 730 ரயில்வே ஸ்டேஷன்களில், அதிக வருவாய் தரும் 'என்.எஸ்.ஜி.,1' (Non Suburban Group) அந்தஸ்தில், கோவை ரயில் சந்திப்பு உள்ளது. பயணிகள் வருவாயில் மட்டுமே, ஆண்டுக்கு ரூ.300 கோடிக்கும் மேல் வருவாய் கொடுத்து, தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரும் சந்திப்புகளின் பட்டியலில், மூன்றாமிடத்தில் இருக்கிறது. சேலம் கோட்டத்தில் இதன் வருவாய் பங்களிப்பு43 சதவீதம்.
தினமும் 137 ரயில்களுடன், ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டு சாதனை படைத்து வருகிறது.கோவையிலிருந்து எவ்வளவு கட்டணத்தில் ரயில்களை இயக்கினாலும், அதற்கு நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்பதற்கு உதாரணம் தான், கோவையிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள். இவற்றிலிருந்தே, கோவை நகருக்கான ரயில் தேவைகள் எவ்வளவு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் நேரில் பார்த்தால், தாலுகா தலைமையிடத்து ரயில்வே ஸ்டேஷனை விடவே இந்த சந்திப்பு மோசமாக இருப்பதை உணர முடியும்.கோவை நகரின் முக்கிய சந்திப்பை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்பது, கால் நுாற்றாண்டு கால கோரிக்கை.
ஓராண்டுக்கு மேலாகியும்
மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரிய ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் (R.L.D.A.,) கீழும், சிறிய ஸ்டேஷன்கள், 'அம்ரித் பாரத்' திட்டத்திலும் மேம்படுத்தப்படுகின்றன.நெரிசல் இல்லாத நுழைவாயில், பயணிகள் செல்லவும், வரவும்தனித்தனி வாயில்கள், நெரிசல் இல்லாதபாதைகளை ஏற்படுத்துவது, பஸ் ஸ்டாண்ட் மற்றும் மெட்ரோ ஸ்டேஷன்களை, ரயில்வே ஸ்டேஷனுடன் ஒருங்கிணைப்பது போன்றவை, மறுமேம்பாட்டுத் திட்டத்தில் முன் மொழியப்படுகின்றன.
ஆர்.எல்.டி.ஏ., திட்டத்தில், கோவை உட்பட தமிழகத்தில் 9 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில், சென்னை எக்மோர், தாம்பரம், மதுரை, காட்பாடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய சந்திப்புகளுக்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. சென்னை சென்ட்ரல், ஆவடி மற்றும் கும்பகோணம் சந்திப்புகளுக்கு, விரிவான திட்ட அறிக்கையே தயாராகிவிட்டது.
சில சந்திப்புகளில் பணிகளும் துவங்கி நடந்து வருகின்றன. ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த கோவை சந்திப்புக்கு, ஓராண்டுக்கு மேலாகியும் சாத்தியக்கூறு அறிக்கை கூட தயார் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில், கலெக்டர் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்ற ஒரு கூட்டம் நடத்தப்பட்டபோது, ரூ.700 கோடி மதிப்பில் கோவை சந்திப்பு மேம்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்டது.
புதிய ரயில்வே கோட்டம்
கோவை சந்திப்புக்கு அருகிலேயே, கோவை மெட்ரோ ரயில் ஸ்டேஷனும் வருவதால், அதற்கேற்ப இரண்டு ஸ்டேஷன்களையும் ஒருங்கிணைத்து 'பிபிபி' (தனியார்-மக்கள் பங்களிப்பு) முறையில் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், கோவையிலுள்ள தொழில் மற்றும் சமூக அமைப்பினர், பெருமகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் பல மாதங்களாகியும், அதற்குப் பின் எந்த முன்னேற்றமும் இல்லை. கோவைக்கு வரும் ரயில்வே உயரதிகாரிகளிடம் கேட்டால், 'ரூ.800 கோடி மதிப்பில், ரூ.900 கோடி மதிப்பில்... மேம்படுத்தப்படவுள்ளது' என்று குத்து மதிப்பாக ஒரு பதிலைக் கூறி விட்டுத் தப்பி விடுகின்றனர். இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை, திட்ட அறிக்கை ஏன் தயாரிக்கப்படவில்லை என்பதற்குப் பதிலே இல்லை.
கோவை சந்திப்புக்கு அருகிலுள்ள மத்திய ஜவுளித்துறை இடங்களை எடுத்து, சந்திப்பின் முன்புறமுள்ள பள்ளி வாசல், ஸ்டேட் பாங்க் ஆகியவற்றுக்கு மாற்று இடம் கொடுத்து, கட்டடம் கட்ட இழப்பீடு தந்து, சந்திப்பை விரிவாக்கம் செய்ய வேண்டும்.அருகிலுள்ள வடகோவை ஸ்டேஷனிலும் கூடுதல் நடைமேடைகளை அமைத்து, இரண்டு ஸ்டேஷன்களிலும் சேர்த்து 10 நடைமேடைகளை அமைக்கலாம்.
அப்போது தான், கோவை சந்திப்பில் நெரிசலைக் காரணம் காட்டி, ரயிலை இயக்க மறுப்பதும், இங்கு வராமல் போத்தனுார் வழியே கேரளா செல்வதும் தடுக்கப்படும்.சென்னையில் சென்ட்ரல், எக்மோர் மற்றும் தாம்பரம் என மூன்று ரயில் முனையங்களுடன் நான்காவது முனையமாக வில்லிவாக்கம் உருவாக்கப்படவுள்ளது. போத்தனுார் சந்திப்பைச் சுற்றிலும் ஏராளமான ரயில்வே இடம் இருப்பதால் அதை முனையமாக்கலாம்.கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டத்தையும் போத்தனுாரில் அமைக்கலாம்.
நகருக்கு வெளியே போகட்டும்!
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தமிழக அரசின் 'டிட்கோ' இணைந்து, பல்லடம் அருகேயுள்ள கரவளி மாதப்பூரில், 219 ஏக்கர் பரப்பில் 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க்' அமைக்கப்படவுள்ளது. வடகோவை ஸ்டேஷன் அருகிலுள்ள இந்திய உணவுக் கழக குடோன், பீளமேடு ஸ்டீல் யார்டுகளை அங்கே இடம் மாற்ற வேண்டும்.
அந்த இடத்தில் வடகோவையில் கூடுதல் நடைமேடைகள், 'பிட் லைன்'கள் அமைக்க வேண்டும். பீளமேட்டில் 24 பெட்டிகள் நிற்கும் வகையில் நடைமேடையை நீட்டிக்க வேண்டும். இவற்றை இடம் மாற்றுவதால், நகருக்குள் போக்குவரத்து நெரிசலும் குறையும்.ரயில் போக்குவரத்து அதிகரித்து, நகர வளர்ச்சியும் அடுத்த கட்டத்துக்கு நகரும்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள கோவை எம்.பி., குரல் கொடுத்து, போராடி வெல்ல வேண்டிய கோரிக்கைகளில் இது மிக முக்கியமானது!

