அமலானது நடத்தை விதிகள்; யாருக்கு என்ன கட்டுப்பாடு?
அமலானது நடத்தை விதிகள்; யாருக்கு என்ன கட்டுப்பாடு?
ADDED : மார் 17, 2024 01:12 AM

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருகின்றன. தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, இந்த நாடே, தேர்தல் கமிஷனின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
அரசியலமைப்பு சட்டத்தின், 324வது பிரிவின்படி, தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடக்க, இந்த விதிகளை அமல்படுத்த தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய அறிவிப்பு
இந்த விதிகள், அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு அதிகாரிகள், ஏன் பொதுமக்களுக்கும் பொருந்தும்.
தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை, தேர்தல் பணியில் ஈடுபடும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தேர்தல் கமிஷனின் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
கடந்த, 1960ல் கேரள சட்டசபை தேர்தலில் முதல் முறையாக இந்த நடைமுறை அறிமுகமானது. அதைத் தொடர்ந்து, 1962 லோக்சபா தேர்தலில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த, 1967ல் இருந்து லோக்சபா மற்றும் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் அமல்படுத்தப்பட்டது.
இந்த விதிகளின்படி, அரசுகள் எவ்வித புதிய அறிவிப்புகள், திட்டங்கள் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா நடத்த முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, துவக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்.
அமைச்சர்கள் உள்ளிட்டோர், அதிகாரப்பூர்வ கார்கள் உள்ளிட்ட வாகனங்களை, அரசு பணிக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த முடியாது. எந்த வகையிலும், பொது நிதி, அவர்களுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
கோவில், சர்ச், மசூதி, குருத்வாரா உள்ளிட்ட எந்த ஒரு வழிபாட்டு தலத்தையும் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.
மதம், ஜாதி ரீதியில் உணர்வுகளைத் துாண்டும் வகையில், ஓட்டுகளை பெறுவதற்காக கருத்து தெரிவிக்கக் கூடாது; பேசக் கூடாது.
அதிகாரிகளை இடமாற்றம் செய்வது போன்றவை மேற்கொள்ள முடியாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற வேண்டும்.
கருத்து கணிப்பு
ஓட்டுப்பதிவு நடப்பதற்கு முந்தைய மற்றும் பிந்தைய, 48 மணி நேரங்களில், எவ்வித கருத்துக் கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது.
பொதுமக்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும். ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர், ஓட்டுச்சாவடிக்கு, 100 மீட்டர் பரப்புக்குள் மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை யாரும் எடுத்துச் செல்ல முடியாது.
இந்த விதிகளை மீறினால், இந்திய தண்டனை சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.
-- நமது சிறப்பு நிருபர் -

