'இலை' போதும்; 'பூ' வேண்டாம்: தே.ஜ., கூட்டணி கட்சிகள் முடிவு
'இலை' போதும்; 'பூ' வேண்டாம்: தே.ஜ., கூட்டணி கட்சிகள் முடிவு
ADDED : மார் 19, 2026 05:04 AM

- நமது நிருபர் -
தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், இரட்டை இலை சின்னத்தில், போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தே.ஜ., கூட்டணியில், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., ஆகிய கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தன.
தற்போது சட்டசபை தேர்தலில், இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை, பா.ஜ.,வே மேற்கொண்டு, தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க முயற்சி நடந்தது. ஆனால், சட்டசபை தேர்தலில், தாமரையை விட இரட்டை இலைக்கு மவுசு அதிகம் என்பதால், அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட, பழனிசாமியிடம் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஆனால், ஐ.ஜே.கே., தென்னிந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள், தாமரையில் நிற்கலாமா என யோசித்து வருகின்றன. அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க பழனிசாமி பேச்சு நடத்துகிறார்.
பெரும்பாலான சிறிய கட்சிகள் இரட்டை இலையில் நிற்க ஆர்வம் காட்டுவதால், தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீட்டில், தற்போது அ.தி.மு.க., கை ஓங்கி உள்ளது. இதனால், பழனிசாமி உற்சாகமாக இருக்கிறார்.
அதேநேரம், துவக்கத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டிய சிறிய கட்சிகள், திடுமென இரட்டை இலையின் பக்கம் திரும்பியதால், பா.ஜ., தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில், சிறிய கட்சிகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என தெரியாமல், பா.ஜ., தலைவர்கள் தடுமாறி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

