சுற்றுச்சூழல் என்பது... மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல!
சுற்றுச்சூழல் என்பது... மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல!
UPDATED : ஜன 24, 2024 04:02 AM
ADDED : ஜன 24, 2024 02:15 AM

கட்டுரையாளர், தாவரவியல் ஆராய்ச்சியாளர். பல்லடம் அடுத்த,சித்தம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தாவரவியல்ஆராய்ச்சி தொடர்பாக, 30க்கும் மேற்பட்டநாடுகளுக்கு பயணித்தவர்; இஸ்ரேலில் நடந்த,147 நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்ற
கருத்தரங்கில், இவரது படைப்பும் வெளியானது.
உள்நாட்டு மரங்கள் மற்றும் தாவரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், எதிர்கால சந்ததிகள் மேம்படும். மழைக்காடுகளே மழை வருவதற்கான முக்கிய காரணியாக அமைகின்றன. மழைக்காடுகள் குறித்து தெளிவாகத் தெரிந்து கொண்டாலே, காலநிலை மாற்றம் குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடியும். மழைக்காடுகளை பாதுகாப்பதுடன், அங்குள்ள உயிரினங்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். மரம் நடுவது வரவேற்கத்தக்க செயல். ஆனால், உரிய வழிகாட்டுதலுடன் இதை மேற்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை, உலகம் சந்தித்து வரும் நிலையில், தாவரவியல் குறித்து அனைவரும் அறிந்துகொள்வது அவசியம். இயற்கை சார்ந்து நாம் சந்திக்கக்கூடிய பிரச்னைகளுக்கு தீர்வு என்பது, தாவரங்களில்தான் உள்ளது. ஆனால், இதரப் படிப்புகளை போன்று தாவரவியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. மரங்கள், தாவரங்களில் அனைத்து விதப் பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு. புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைக்கூட, கட்டுப்படுத்தக்கூடிய திறன் தாவரங்களில் உள்ளன.
பழமையான மரங்கள்
ஊட்டி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் உள்ளன. சூழலைக் கடந்து இவை எவ்வாறு இவ்வளவு ஆண்டு காலங்கள் வாழ்கின்றன என்பது குறித்து ஆராய வேண்டும். வனப்பகுதிகளில், வெளிநாட்டு தாவரங்கள், மரங்கள் வளர்வதும், பரவுவதும் ஆபத்தானது.
விழிப்புணர்வு என்ற பெயரில், சிலர் வெளிநாட்டு மரங்களை நடுகின்றனர். இது மோசமான நடவடிக்கையாகும். சுற்றுச்சூழல் என்பது வெறும் மரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல. செடி - கொடிகள், புல் - பூண்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் சார்ந்தது. எந்த மரங்களை எங்கு எந்தளவில் நட வேண்டும் என்பது போன்ற செயல்பாடுகளை அனுபவம் மிக்க ஆராய்ச்சியாளர்களை ஆலோசித்து செய்தால் மட்டுமே அது நுாறு சதவீதம் பயனுள்ளதாக இருக்கும்.
நெகிழியால் பேராபத்து
பெட்ரோலியம் சார்ந்த பொருட்களால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதற்கு அடுத்ததாக, நெகிழிப் பயன்பாடு உலகளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வளர்ச்சி பெற்ற நாடுகளும் கூட நெகிழி பயன்பாட்டை தவிர்க்க மறுக்கின்றன. மரம் சார்ந்த பயன்பாடுகள் இருந்தபோது மாசு குறைவாக இருந்தது. ஆனால், இன்று நெகிழி பயன்பாடு கடல் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
நெகிழிப்பயன்பாடு தவிர்க்க இயலாததுதான் என்றாலும், புவி மாசு ஏற்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போதே இதைக் கவனிக்கவில்லை எனில், எதிர்காலத்தில், மக்கள்தொகை அதிகளவு பெருகும்போது, மிகப்பெரிய பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
மழைக்காடுகளில் அரிதாகி வரும் தாவரங்கள், உயிரினங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். வால்பாறை போன்ற அடர் வனப்பகுதிகளில் சுருளி, பாலி, இரும்பகம் உள்ளிட்ட மரங்கள் வேகமாக அழிந்து வருகின்றன. இவற்றின் விதைகள் முளைப்புத்திறன் குறைந்தவை. வனத்துறையில் ஓய்வு பெற்ற, அனுபவமிக்கவர்களின் ஆலோசனை பெற்று மழைக்காடுகளை மேம்படுத்த வேண்டும்.
கடந்த 1972ல், சீமைக்கருவேல மரங்கள் பரவத் துவங்கின. இவை, சில இடங்களில் மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை காட்டிலும் முறைப்படுத்துவதே அவசியம். நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக கூறப்பட்டாலும், ஒரே வார்த்தையில் இவற்றை முழுமையாக அகற்ற வேண்டும் என்று கூறிவிட முடியாது. இதுகுறித்த முழுமையான ஆராய்ச்சி தேவை.
காலநிலை மாற்றம் கண்கூடு
உலக நாடுகள் அனைத்தும், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்று மாசு உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஒவ்வொரு நாடுகளும் இதில் பல்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருகின்றன. நாட்டு மரங்கள், தாவரங்களை பாதுகாப்பதில், அந்தந்த நாடுகள் எந்தச் சூழலிலும் பாரபட்சம் காட்டக்கூடாது. நாட்டு மரங்கள், தாவரங்களைப் பாதுகாக்காததன் விளைவு, காலநிலை மாற்றத்தால் தவிக்கிறோம்.
கார்பன்--டை--ஆக்சைடு அதிகரித்து, புவி வெப்பமடைவதே காலநிலை மாற்றத்துக்கு காரணமாக உள்ளது. சமுத்திரங்களில்கூட 'எல்நினோ', 'லாநினோ' உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
கடலில் ஏற்படும் காற்றின் மாறுபாடு, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மழை இல்லாத பகுதியில் அதிக மழை பெய்வதும், அதிக மழை பெய்யும் பகுதி வறட்சி மிகுந்து காணப்படுவதுமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுபோன்ற மாற்றங்கள், பயிர் உற்பத்தியைப் பாதிக்க செய்யும்.
காலநிலை மாற்றம் என்பது உலக அளவில் இன்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது; வளரும் நாடுகள் அதிக அளவில் பாதிக்கின்றன. காலநிலை மாற்றத்தால், சிறிய தீவுகள் தங்கள் பாரம்பரியத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
பாதை மாறக்கூடாது
இன்று, குழந்தைகள் அனைவரிடமும் விழிப்புணர்வு உள்ளது. அதேசமயம், சமுதாயத்தின் பிடியில் இருந்து வெளிவர மறுக்கின்றனர். பள்ளிப் பருவம் முதல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து கற்றுத் தரப்படுகிறது. ஆனால், பின்னாளில் இந்த சமூகம் அவர்களின் பாதையை மாற்றி விடுகிறது.
சுற்றுச்சூழல் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியாளருக்கும், தாவரவியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. தாவரவியல் ஆராய்ச்சியாளரை மதிப்பு மிக்க கண்ணோட்டத்தோடு யாரும் பார்ப்பதில்லை. வாழ்க்கை அறிவியலை போதிக்கும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்களை, 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு இணையாக வழிநடத்த வேண்டும். அப்போதுதான் எதிர்வரும் சந்ததியரும், தாவரவியல் ஆராய்ச்சியில் முனைப்பு காட்டுவர்.

