ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாணியில் கரூர் தொகுதியில் தயாராகும் பட்டிகள்: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாணியில் கரூர் தொகுதியில் தயாராகும் பட்டிகள்: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
UPDATED : மார் 22, 2026 05:34 AM
ADDED : மார் 22, 2026 05:02 AM

- நமது நிருபர் -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாணியில், கரூர் தொகுதியில் பட்டிகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைத்து பணம் கொடுக்க, தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்வதாக அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தமிழகத்தில், அடுத்த மாதம் 23ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் அதிக பணப்பட்டுவாடா செய்யும் மாவட்டங்களில் ஒன்றாக கரூர் உள்ளது. கடந்த 2016 தேர்தலில், பண வினியோக குற்றச்சாட்டால், அம்மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தங்க வைத்து பணம்
கடந்த 2021 தேர்தலில், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிட்ட போது, பஞ்சாயத்து மற்றும் வார்டுகளில், மக்களை அமர வைத்து, தினமும் 100 முதல் 200 ரூபாய் வரை பணம் வழங்கியதாக புகார் எழுந்தது.
இதே பாணியில், கடந்த 2025 பிப்ரவரியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின்போது, கொட்டகைகளிலும், திருமண மண்டபங்களிலும், வாக்காளர்களை தங்க வைத்து பணம் வழங்கப்பட்டது. கடந்த லோக்சபா தேர்தலின் போதும் பட்டிகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த சட்டசபை தேர்தலில், கரூர் தொகுதியில், தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
இத்தொகுதியில் உள்ள, நகர்ப்புற வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில், இரும்பு ஷெட் வாயிலாக, பல இடங்களில் கொட்டகை போடப்பட்டு வருகிறது.
வாக்காளர்களை அடைத்து வைப்பதற்காக, தேர்தல் அலுவலகம் என்ற பெயரில், 48 பட்டிகளை அமைத்துள்ளதாக, அ.தி.மு.க.,- - எம்.பி., இன்பதுரை, சென்னையில் தேர்தல் கமிஷனில் கடந்த, 17ல் புகார் அளித்தார்.
இதுபோல, மாவட்ட தேர்தல் அலுவலர் ரவிகுமாரிடம், முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், ''இதுவரை, 100க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டி அமைக்கப்பட்டுள்ளன. அதில், சுழற்சி முறையில் வாக்காளர்களை தங்க வைத்து, பணம் வினியோகம் செய்ய தி.மு.க., திட்டமிட்டுள்ளது,” என்றார்.
அகற்றம்
இந்த புகார் எதிரொலியாக, கரூர் அருகே பெரியகோதுாரில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம், கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ஆகியவற்றில் அமைக்கப்பட்ட, இரும்பு ஷெட்டுகள் நேற்று அகற்றப்பட்டன.
இதற்கிடையே, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், “கரூர் தொகுதியில், தி.மு.க., சார்பில், ஒன்பது தேர்தல் பணிமனைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
''மற்ற இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களும், வீட்டு விசேஷம் போன்ற சொந்த காரணங்களுக்காக பொதுமக்களும் ஷெட் அமைத்து இருக்கலாம்,'' என தெரிவித்தார்.
கரூர் தொகுதியில், பட்டிகள் அமைக்கும் பிரச்னையால், தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

