ஈரோடு மக்கள் சந்திப்பு: த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்?
ஈரோடு மக்கள் சந்திப்பு: த.வெ.க.,வில் இணையும் பிரபலங்கள் யார்?
ADDED : டிச 17, 2025 01:01 AM

ஈரோட்டில் விஜய் முன்னிலையில், பிற கட்சிகளின் முக்கிய பிரபலங்கள் சிலர், த.வெ.க.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியதாவது: த.வெ.க.,வில், செங்கோட்டையன் வருகையை, கொங்கு மண்டலத்தில் உணர்த்தும் வகையில், ஈரோடு 'மக்கள் சந்திப்பு' இருக்க வேண்டும் என விஜய் 'அட்வைஸ்' செய்துள்ளார். இதனால், ஈரோடு கூட்டத்தை, சிறு அசம்பாவிதம் கூட நிகழாதபடி நடத்தி முடிக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.
அதேநேரம், தன்னை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கிய, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மட்டுமின்றி, மற்றவர்களும் ஆச்சரியப்படும் வகையில், கூட்டம் இருக்க வேண்டும் என கருதுகிறார்.
த.வெ.க.,வில் இணைவதை, கடைசி நிமிடம் வரை வெளிக்காட்டாமல் இருந்தவர் செங்கோட்டையன். அதுபோல, ஈரோட்டுக்கு நாளை விஜய் வரும்போது, பிற அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரை, த.வெ.க.,வில் இணைக்க, அமைதியாக பேசி வருகிறார். அவர்கள் யார், யார் என்பது நிகழ்ச்சி நாளில் தான் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

