'தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிப்பதால் விவசாயிகள் வருவாய் ரூ. 35,000 கோடி உயரும்'
'தானியங்களிலிருந்து எத்தனால் தயாரிப்பதால் விவசாயிகள் வருவாய் ரூ. 35,000 கோடி உயரும்'
ADDED : ஏப் 13, 2025 02:14 AM

புதுடில்லி: தானியங்களைக் கொண்டு எத்தனால் தயாரிக்கப்படும் நடைமுறையால், விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எத்தனால் உற்பத்தி குறித்தும், அதன் எதிர்கால வளர்ச்சி குறித்தும், தானிய எத்தனால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் 'பிரைமஸ் பார்ட்னர்ஸ்' நிறுவனங்கள் இணைந்து, அறிக்கை வெளியிட்டுள்ளன.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்காச்சோளம் மற்றும் உபரியாக உள்ள உடைந்த அரிசி போன்ற தானியங்களை பிழிந்து எத்தனால் தயாரிப்பை மேற்கொள்வதன் வாயிலாக, விவசாயிகளின் வருமானம் ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற வாதம் அடிப்படையற்றது. ஏனென்றால், இந்தியாவில் தற்போது ஆண்டு ஒன்றுக்கு 165 லட்சம் டன் தானியங்கள் உபரியாக உள்ளன. இவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவதன் வாயிலாக, விவசாயிகளும் பெரும் அளவில் பயன் பெறுவர்.
எரிசக்தி பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் கால நிலை மாற்றம் தொடர்பான நாட்டின் இலக்குகளை அடைய, தானியங்களைக் கொண்டு எத்தனால் தயாரிப்பது உதவிகரமானதாக இருக்கும். குறைவான நீர் தேவை கொண்ட பயிர்களில் ஒன்றான மக்காச்சோளம், பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகளை கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வலுவான எத்தனால் மாற்றுத்திறன் வாய்ந்ததாகவும் உள்ளது.
பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை முன்கூட்டியே அடைந்ததன் வாயிலாக, இந்தியா தனது துாய்மை எரிசக்தி உற்பத்தி திறனை வெளிக்காட்டியுள்ளது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, பெட்ரோலில் எத்தனால் கலப்பு 19.60 சதவீதத்தை எட்டியுள்ளது.
எனினும், வரும் காலங்களில் இந்த செயல்பாடுகள் தொடர, தானியங்களைக் கொண்டு எத்தனால் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களை சரி செய்ய, அரசு முன்வர வேண்டும்.
தயாரிப்புக்கான செலவு அதிகரித்து வரும் நிலையில், எத்தனால் கொள்முதல் விலை அதற்கேற்ப மாற்றியமைக்கப்படுவதில்லை. உபரி தானியங்களை விடுவிப்பது, எத்தனால் கொள்முதல் விலையை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே, எத்தனால் தயாரிப்பு ஆலைகள் தொடர்ந்து இயங்க முடியும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 எத்தனால் தயாரிப்பால், 1.08 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி சேமிப்பு
2 185 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி தவிர்க்கப்பட்டுள்ளது
3 எத்தனால் கலப்பால், 557 லட்சம் டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டுள்ளது.