'தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்றார் ஈ.வெ.ராமசாமி': சீமான்
'தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என்றார் ஈ.வெ.ராமசாமி': சீமான்
ADDED : டிச 13, 2025 05:50 AM

சென்னை: ''தமிழை காட்டுமிராண்டி மொழி என்றார் ஈ.வெ.ராமசாமி; இனிமையான மொழி என்றார் பாரதி,'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ்.,சின் 'விஜில்' அமைப்பு சார்பில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் இரவு சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது: நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன்.
தமிழை, 'காட்டுமிராண்டி மொழி' என ஈ.வெ.ரா., சொன்னார். பாரதியோ, 'இனிமையான மொழி' என்றார். நான், 'பாட்டன் பாரதி' என சுவரொட்டி ஒட்டியபோது, அனைவரும் கேலி செய்தனர். தமிழை சனியன் என சொன்னவர் தந்தையாக இருக்கும்போது, தமிழை இனிமை என சொன்ன பாரதி பாட்டனாக இருக்கக் கூடாதா?
ஈ.வெ.ரா., வந்த பின் தான், பெண்ணியம் போற்றப்பட்டது; பகுத்தறிவு புகுத்தப்பட்டது என்கின்றனர். அவருக்கு முன்பே, பெண் விடுதலை குறித்து பாரதி பேசி உள்ளார். பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கிடையாது; கேள்வி எழுப்புவது.
கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி அழைத்து சென்றவர், முத்துராமலிங்க தேவர். கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுத்தவர் வைத்தியநாத அய்யர். அதேபோல், ஈ.வெ.ரா., செய்ததாக ஒரு செய்தியும் கிடையாது. எந்த பிராமண எதிர்ப்பை கூறி, திராவிட இருப்பை காண்பித்தனரோ, அதே பிராமண கடப்பாரையை கொண்டு, பாழடைந்த திராவிட கட்டடத்தை இடிப்பேன்.
முதன்முதலில் தன் பாடல் வழியாக, 'தமிழ்நாடு' என முழங்கியவர் பாரதி. அதனால், தமிழ்நாடு என பெயர் சூட்டியது, அண்ணாதுரை அல்ல; பாரதி தான். ஹிந்தி ஒழிக என்பது எங்கள் கோட்பாடு அல்ல; தமிழ் வாழ்க என்பதே கோட்பாடு. இவ்வாறு அவர் பேசினார்.

