ஈ.வெ.ரா., எதிர்ப்பு சர்ச்சை சர்வதேச பிரச்னையாகிறது
ஈ.வெ.ரா., எதிர்ப்பு சர்ச்சை சர்வதேச பிரச்னையாகிறது
UPDATED : பிப் 11, 2025 06:22 AM
ADDED : பிப் 11, 2025 06:21 AM

சீமானை மிகக் கடுமையாக எதிர்க்கும் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேந்தோர், ஈ.வெ.ரா., எதிர்ப்பு பிரச்னையை சர்வதேச பிரசனையாக்க முயன்று வருகின்றனர். குறிப்பாக, இலங்கைத் தமிழர்கள் எங்கெல்லாம் உள்ளனரோ, அங்கெல்லாம் இப்பிரச்னையை கொண்டு செல்ல தீவிரமாகி உள்ளனர்.
அந்த வகையில், சினிமா இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார் என்பவர், இலங்கைக்குச் சென்று, அங்கிருக்கும் சர்ச்சைக்குரிய அரசியல் பிரமுகர் அருண் சித்தார்த் வாயிலாக, யாழ்பாணத்தில் பேட்டியளித்திருக்கிறார். அப்போது, ''இலங்கையில் காரல் மார்க்ஸ், காந்தி போன்ற தலைவர்களுக்கு சிலை இருக்கிறது. தமிழர்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் பாடுபட்ட ஈ.வெ.ரா.,வுக்கு சிலை இல்லை. அதனால், விரைவில் இங்கு சிலை அமைக்கப் போகிறோம்,'' என சொல்லி உள்ளார். இலங்கையில் இருக்கும் சீமான் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதே போல, லண்டனில் தி.வி.க., ஆதரவாளர்கள், அரசு அனுமதியோடு, ஈ.வெ.ரா., கருத்துக்களை பரப்பும் விதமாக கூட்டம் போட்டு பேசியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு கூடிய சீமான் ஆதரவாளர்கள், ' 'தமிழை மலம்' என்றும்; 'காட்டுமிராண்டி மொழி' என்றும் விமர்சித்த ஈ.வெ.ரா.,வுக்கு ஆதரவாக கூட்டம் போடக் கூடாது' என எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டுள்ளனர்.
அனுமதியின்றி கூடி கோஷமிட்ட சீமான் ஆதரவாளர்களை லண்டன் போலீசார் விரட்டி அடித்துள்ளனர். இதேபோல, பாரிஸிலும் ஈ.வெ.ரா., விவகாரம் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்னை வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
