மதுபோதையில் வம்பு! டிரைவரை காலணியால் தாக்கினார் மாஜி முதல்வர் மகள்!
மதுபோதையில் வம்பு! டிரைவரை காலணியால் தாக்கினார் மாஜி முதல்வர் மகள்!
ADDED : மார் 04, 2025 07:21 AM

கவுகாத்தி: மதுபோதையில் அநாகரிகமாக நடந்து கொண்ட டிரைவரை அசாம் மாஜி முதல்வர் மகள் காலணியால் தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.
அசாம் மாநில மாஜி முதல்வர் பிரபுல்லா குமார் மகந்தா. இவரின் மகள் டிரைவர் ஒருவரை காலணியால் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் திஸ்பூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்துள்ளது. டிரைவரை மாஜி முதல்வர் மகள் பிரஜோய்தா காஷ்யப் காலணியால் சரமாரியாக தாக்குவதை அங்கு இருந்த ஒருவர் தமது செல்போனில் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
அதன் பின்னரே இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதுகுறித்து பேசிய மாஜி முதல்வர் மகள் பிரஜோய்தா காஷ்யப், நேற்று நன்றாக குடித்துவிட்டு எனது அறையின் கதவை தட்டி உள்ளார். இதுபோன்று பலமுறை அவர் நடந்துகொண்டு இருக்கிறார். எப்போதும் மதுபோதையில் அனைவர் பற்றியும் தவறாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். எல்லை கடந்த நிலையில் அறைக்கதவை தட்டி தொந்தரவு கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் தாக்குதலுக்கு ஆளான டிரைவரோ, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், அரசு வாகனத்தை ஓட்டும் என்னை, சொந்த வேலைகளுக்காக பயன்படுத்துகிறார். மளிகை சாமான்கள் வாங்கி வர வற்புறுத்துகிறார் என்று கூறி உள்ளார்.
வீடியோ மூலம் நடந்த சம்பவம் வெளியாகி உள்ள நிலையில், பிரபுல்லாகுமார் மகந்தா தற்போது எம்.எல்.ஏ., கிடையாது. பின்னர் எம்.எல்.ஏ., குடியிருப்பு வளாக வீட்டில் எப்படி வசித்து வருகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.