சீமான் போக்கில் திடீர் மாற்றம்; விலகும் நிர்வாகிகள்
சீமான் போக்கில் திடீர் மாற்றம்; விலகும் நிர்வாகிகள்
ADDED : நவ 12, 2024 03:46 AM

நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகி உட்பட இருவர், பா.ஜ.,வில் இணைய பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு 8.9 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. தேர்தல் முடிவுக்கு பின், சீமான் செயல்பாடுகளால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இணையும் பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில், நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினர்.
அவரை தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். சீமானுக்கு நெருக்கமாக இருந்த விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலர் பூபாலனும் விலகினார். பின், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் மணிகண்டனும் விலகினார்.
சமீபத்தில், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சியும் விலகியுள்ளார்.
இந்நிலையில், மாநில பெண் நிர்வாகி உட்பட இரண்டு பேர், பா.ஜ.,வில் இணைய பேச்சு நடத்திய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் கட்சியின் மாநாட்டுக்கு பின், சீமானின் செயல்பாடுகள் சரியில்லை. விஜய் குறித்து சீமான் பேசிய பேச்சுகளை யாரும் ரசிக்கவில்லை; இளைஞர்களும் விரும்பவில்லை.
இது மட்டுமல்ல; கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் அனைவரிடமும் சீமான் அணுகும் போக்கு முற்றிலும் மாறியிருக்கிறது.
கடும் அதிருப்தி
பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். பெண் பேச்சாளரும், மாநில நிர்வாகியுமான ஒருவரை தனக்கு போட்டியாக சீமான் கருதுகிறார்.
அதனால், பலரையும் தாறுமாறாக விமர்சிப்பதோடு, அனைவரிடமும் கோபமாக நடந்து கொள்கிறார். இதனால், கட்சி நிர்வாகிகள் பலரும் சீமான் மீது கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர்.
கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சியின் பெண் பேச்சாளரும் தற்போது பா.ஜ.,வில் சேர தயாராகி விட்டார். கட்சி கொள்கையை பரப்பும் நிர்வாகி ஒருவர், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தாயகம் திரும்பியதும், அவரது முன்னிலையில் பா.ஜ.,வில் இணையவிருக்கிறார்.
மேலும் சில நிர்வாகிகள், பா.ஜ., - த.வெ.க., போன்ற கட்சிகளில் இணைய பேச்சு நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
- நமது நிருபர் -