தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வெற்றியை விட தோல்வியில் தீவிரம்!

வெற்றியை விட தோல்வியில் தீவிரம்!

வெற்றியை விட தோல்வியில் தீவிரம்!

1


ADDED : ஏப் 11, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : ஏப் 11, 2026 05:33 AM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பா.ம.க., தலைவர் அன்புமணியோ, அவரது மனைவி சவுமியாவோ தேர்தலில் போட்டியிட்டால், அவர்களின் தொகுதிகளுக்கே கட்சியினர் முக்கியத்துவம் கொடுப்பர். கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும், துடிப்பான தொண்டர்களும், அன்புமணி போட்டியிடும் தொகுதியில் குவிந்து விடுவர். இதனால், பா.ம.க.,வின் மற்ற வேட்பாளர்களுக்கு வருத்தம் இருக்கும். ஆனால், வெளியே சொல்ல முடியாமல் தவிப்பர்.

சவுமியா, கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் தர்மபுரியில் போட்டியிட்டார். அப்போது, 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிட்டாலும், அக்கட்சியினர் தர்மபுரிக்கே முக்கியத்துவம் தந்தனர். ஆனாலும் அவர், 20,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இத்தேர்தலில் அப்படியே காட்சி மாறியுள்ளது. தர்மபுரி தொகுதியில் சவுமியா போட்டியிடுகிறார். ஆனாலும், தர்மபுரியை விட பென்னாகரம் தொகுதிக்கே பா.ம.க.,வினர் முக்கியத்துவம் தருகின்றனர். அன்புமணியும் பென்னாகரத்திலேயே அதிகம் வலம் வருகிறார்.

முக்கியமான தொகுதி



அரசியல் ரீதியாகவும் சரி, 'சென்டிமென்ட்' ரீதியாகவும் சரி, பென்னாகரம் பா.ம.க.,வுக்கு மிக மிக முக்கியமான தொகுதி. 2004 முதல் 2009 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த பா.ம.க., 2009 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது. இதனால், கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்த நிலையில், 2010ல் நடந்த பென்னாகரம் இடைத்தேர்தலில், பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், 41,285 ஓட்டுகள் பெற்று, இரண்டாம் இடம் பிடித்தார். பா.ம.க., தனது வன்னியர் சமூக ஓட்டு வங்கியை நிரூபித்த தேர்தல் அது.

அப்போது, பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்குமரன், இப்போது காங்கிரசில் இணைந்து, அதே பென்னாகரம் தொகுதியில், பா.ம.க.,வை எதிர்த்து தி.மு.க., ஆதரவில் போட்டிடுகிறார். அவரை எதிர்த்து பாடி செல்வத்தை அன்புமணி நிறுத்தியுள்ளார்.

பா.ம.க., தலைவராக இருந்த ஜி.கே.மணியின் மகன்தான் தமிழ்குமரன். கடந்த 2024 டிசம்பரில், கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட பின், அன்புமணி வகித்த இளைஞரணி தலைவர் பதவியை, தமிழ்குமரனுக்கு ராமதாஸ் வழங்கினார். இதை அன்புமணி விரும்பாததால், தமிழ்குமரன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதுவும் அப்பா -மகன் பிரிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

தி.மு.க.,வின் துாண்டுதலால், ராமதாசிடம் இருந்து தன்னை பிரித்தது ஜி.கே.மணி தா ன் என, அன்புமணி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். ஜி.கே.மணி ராமதாஸ் பக்கம் இருப்பதால், ராமதாஸ் அணியில் சீட் கிடைத்தாலும், வெற்றி வாய்ப்பு இல்லை என்று கணித்த தமிழ்குமரன், கடந்த மார்ச் 28ம் தேதி, திடீரென காங்கிரசில் இணைந்து, சில நாட்களிலேயே, அக்கட்சியின் பென்னாகரம் வேட்பாளராகி விட்டார். அதை தொடர்ந்து, பா.ம.க.,வினரும் வன்னியர் சங்கத்தினரும், 'பா.ம.க.,வின் துரோகி, வன்னியர் இன துரோகி' என, ஜி.கே.மணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தோற்கடிக்க தீவிரம்



இதையடுத்து, பென்னாகரத்தில் தமிழ்குமரனை தோற்கடித்தே தீர வேண்டும் என்று, பா.ம.க.,வினரும் அன்புமணியும் அதிதீவிரத்துடன் களமிறங்கி உள்ளனர்.

பென்னாகரத்தில் நடந்த பா.ம.க., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, 'என்னையும் அப்பாவையும் திட்டமிட்டு பிரித்தவர் ஜி.கே.மணி. முதல்வர் ஸ்டாலினின் கைக்கூலி ஜி.கே.மணி. துணை முதல்வர் உதயநிதியின் கைக்கூலி தமிழ்குமரன். உதயநிதிக்கு இப்போது அனைத்துமாக இருப்பவர் அவர்தான். ஸ்டாலினும் மணியும் சேர்ந்துதான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் தடுத்தனர்.

தி.மு.க.,வில் சேர்ந்தால் ராமதாஸ் குடும்பத்திற்கு துரோகம் செய்தது தெரிந்துவிடும் என, காங்கிரசில் சேர வைத்து, பென்னாகரத்தில் தமிழ்குமரனை நிறுத்தியுள்ளனர். பா.ம.க.,வுக்கும் வன்னியர் சமூகத்திற்கும் துரோகம் செய்தவர்களை தோற்கடித்தே ஆக வேண்டும்' என்றார்.

தர்மபுரி வேட்பாளர் சவுமியாவும், அதே பென்னாகரம் தீவிரத்தில் தான் இருக்கிறார் என்பதற்கு சான்றாக, 'தர்மபுரியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் நான் வெல்ல வேண்டும் என என்னை வாழ்த்துகின்றனர்.

ஆனால், பென்னாகரத்தில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ம.க., வெல்ல வேண்டும் என்பதே என் ஆசை. அங்கு நம் துரோகி போட்டியிடுகிறார். அவரை வீழ்த்த வேண்டும். அதுதான் துரோகத்தால் பாதிக்கப்பட்ட அன்புமணிக்கு மகிழ்ச்சியை தரும்' என்று பேசி வருகிறார்.

பென்னாகரம் தொகுதியில், கிளை கமிட்டி தலைவர்கள் வரை, அனைத்து நிலை நிர்வாகிகளையும் சந்தித்து, தமிழ்குமரனை தோற்கடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் சவுமியா. இதனால், தமிழகம் முழுதும் உள்ள பா.ம.க.,வினரின் ஒட்டுமொத்த கவனமும் பென்னாகரம் பக்கம் திரும்பியுள்ளது.

அதேநேரத்தில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டாலும், தி.மு.க.,வை நம்பியே தமிழ்குமரன் பிரசாரம் செய்து வருகிறார். உதயநிதிக்கு வேண்டப்பட்டவர் என்பதால், தி.மு.க.,வினர் அவருக்காக வேலை செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us