அ.தி.மு.க.,வில் போலி டாக்டர் தம்பதி; கட்சியினர் அதிருப்தி
அ.தி.மு.க.,வில் போலி டாக்டர் தம்பதி; கட்சியினர் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 04:34 AM

திருச்சி : போலி மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி டாக்டர் தம்பதியை, அ.தி.மு.க.,வில் சேர்த்த மாவட்டச் செயலர் மீது அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
திருச்சி, தில்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா பாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் சித்தா டாக்டர்கள் என கூறி மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.
வேட்பாளர்
'இவர்கள் போலி டாக்டர்கள். அதனால், தொடர்ந்து மருத்துவம் பார்க்கக்கூடாது' என, சுகாதாரத்துறை இணை இயக்குநராக இருந்த சீனிவாசன் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டார்.
ஆனாலும், அவர்கள் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தம்பதியான இருவரும் அ.தி.மு.க.,வில் இருந்தனர்.
அதில் தமிழரசி, திருச்சி மாநகர் மகளிர் அணி அ.தி.மு.க., செயலராக இருந்தார். கடந்த 2016 சட்டசபை தேர்தலின்போது, தமிழரசிக்கு திருச்சி மேற்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, அமைச்சர் நேருவை எதிர்த்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பியதும், திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவித்தார், அப்போதைய அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா. அதற்கும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் ஜெயலலிதா பறித்தார்.
இதனால், தம்பதி இருவருக்கும் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு, இருவரும் தி.மு.க.,வில் இணைந்தனர் .
குற்ற பின்னணி
தி.மு.க.,வில் இருந்தபோது, இத்தம்பதியில் சுப்பையா பாண்டியன், கடலுார் மாவட்டத்தில் போலி சித்த மருத்துவ சான்றிதழ்கள் வழங்கிய வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டார்; பின், ஜாமினில் வெளியே வந்தார். இதனால், தி.மு.க., மீதும் இந்த தம்பதிக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில், போலி மருத்துவர்களான தம்பதி இருவரும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் நேற்று முன்தினம் மீண்டும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
'குற்றப் பின்னணி கொண்டவர்களை கட்சியில் சேர்க்க வேண்டாம்' என அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தியுள்ள நிலையில், போலி மருத்துவ தம்பதியை கட்சியில் சேர்த்த, அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் சீனிவாசன் மீது, அக்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து, கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.