ADDED : செப் 25, 2024 05:07 AM

தமிழகத்தில் எவ்வித அரசு அனுமதியும் இன்றி, கருங்கல் குவாரிகளை ஒட்டி செயல்படும் போலி 'எம்-சாண்ட்' ஆலைகளால், மலைகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 440 எம்சாண்ட் நிறுவனங்கள் அனுமதி பெற்று செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் தயாரிக்கும் எம்-சாண்டை தான், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என, பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் தயாரிப்புகள், குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுப்பணித் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் தரப்பரிசோதனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு மட்டுமே, இந்திய தர நிர்ணய அமைப்பின், பி.ஐ.எஸ்., சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்நிறுவனங்கள் தினசரி, 2 லட்சம் டன் 'எம்-சாண்ட்' தயாரித்து, கட்டுமானப் பணிகளுக்கு வழங்குகின்றன. ஆனால், சந்தையில் தினசரி, 4 லட்சம் டன் 'எம்-சாண்ட்' வருகிறது. கருங்கல் ஜல்லி தயாரிக்கும் கிரஷர்களை ஒட்டி, அனுமதியின்றி நடத்தப்படும் போலி ஆலைகள் வாயிலாகவே, தரமில்லாத 'எம்-சாண்ட்' புழக்கத்துக்கு விடப்படுவது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்கு காரணம், தனியார் நிலத்தில் உள்ள பாறைகளை வெட்டி எடுக்க, கனிமவளத் துறை தாராள அனுமதி அளிப்பதுதான் என்றும், அந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, பாறைகள் அதிகளவில் வெட்டி எடுக்கப்படுவதால், மலைகள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக மணல், 'எம்-சாண்ட்' லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நலக் கூட்டமைப்பு தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஆற்று மணல் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், 'எம்-சாண்ட்' பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. இதில், தங்களுக்கு கிடைப்பது தரமான 'எம்-சாண்ட்' தானா என்பதை, எளிதில் அறிய முடியாத நிலை உள்ளது. போலி நிறுவனங்களால் அதிக அளவு தரமில்லாத 'எம்-சாண்ட்' தயாரிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்படுகிறது.
தனியார் பட்டா நிலங்களில், பாறைகளை வெட்டி எடுக்க, கனிமவளத் துறை அனுமதி வழங்குகிறது. இந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி, குவாரி உரிமையாளர்கள், பக்கத்தில் இருக்கும் மலைகளிலும் பாறைகளை அதிகளவு வெட்டி எடுக்கின்றனர். இதனால், மலைக்குன்றுகள் இருந்த இடங்கள், பெரிய பள்ளங்களாக மாறி வருகின்றன. இயற்கை வளங்களான மலைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், போலி நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் இல்லாத சிறு பாறைக்குன்றுகள், கல்லாங்குத்து, மொரப்பு என, வகைப்படுத்தப்பட்ட நிலங்களை பயன்படுத்தி, கருங்கற்களை எடுக்க அனுமதிக்கலாம். இப்படி செய்தால், வனவிலங்குகள், நீர் ஊற்றுகளை பாதுகாக்கலாம். மேலும், ஆற்று மணல் விற்பனை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டது போன்று, அனைத்து நிறுவனங்களின் தயாரிப்பு எம்-சாண்டையும் ஒரு பொது இடத்தில் இருப்பு வைத்து, மாவட்ட கலெக்டர் சான்று அளித்தபின் விற்பனை செய்யலாம். விற்பனை முறைப்படுத்தப்படும்போது போலிகள் தடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.
2,156
தமிழகத்தில் கருங்கல், வண்டல் மண், சவுடு மண் உள்ளிட்ட சிறு கனிமங்கள் எடுப்பதற்காக, உரிமம் வழங்கப்பட்டுள்ள குவாரிகள்
850
கருங்கல் ஜல்லி தயாரிக்கும் நிறுவனங்கள்
310
'எம்-சாண்ட்' ஆலை குவாரிகள்
- நமது நிருபர் -