காரைக்குடியில் போலி குங்குமம் தயாரிப்பு ரூ.22 லட்சம் மதிப்புள்ள பொருள் பறிமுதல்
காரைக்குடியில் போலி குங்குமம் தயாரிப்பு ரூ.22 லட்சம் மதிப்புள்ள பொருள் பறிமுதல்
ADDED : ஏப் 17, 2025 06:40 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே போலியாக குங்குமம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் பல ஆண்டுகளாக டீலக்ஸ் குங்குமம் என்ற பெயரில் குங்குமம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தின் பெயரில் போலியாக குங்குமம் விற்பனை நடப்பதாக இவருக்கு புகார் வந்துள்ளது. சென்னையில் உள்ள மொத்த விற்பனையாளருக்கு குங்குமப் பொருட்களை அனுப்பியுள்ளார். அனுப்பிய பார்சலை விட அதிக அளவு பொருட்கள் வந்திருப்பதாக சென்னையில் இருந்து தகவல் கொடுத்துள்ளனர்.
கூடுதலாக வந்திருக்கும் பார்சலை திருப்பி அனுப்ப அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார். திரும்பி வந்த பார்சலை பார்த்தபோது இவரது கம்பெனி பெயரில் போலியாக குங்குமப் பொருட்கள் தயாரித்து விற்பனைக்கு சிலர் அனுப்பியது தெரிய வந்தது. அரியக்குடி ரயில்வே கேட் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான குங்குமக் கம்பெனியில் இருந்து, தனது கம்பெனி பெயரில் போலியாக குங்குமம் தயாரித்து விற்பனை செய்ததாக அப்துல் அஜீஸ் அழகப்பாபுரம் போலீஸ் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
சிவகங்கை மாவட்ட மருந்து ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், அறந்தாங்கி மருந்து ஆய்வாளர் விமல் ராஜ் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் போலியாக பொருட்கள் தயாரித்தது தெரிந்தது. அப்பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில் ஜோதிகா என்ற பெயரில் குங்குமம் தயார் செய்துள்ளனர். கம்பெனி லைசென்ஸ் காலாவதியாகியுள்ளது. ஆதலால் வேறு நிறுவனமான டீலக்ஸ் குங்குமம் என்ற பெயரில் போலியாக தயார் செய்தது தெரியவந்துள்ளது. போலியாக தயாரித்த ரூ. 22 லட்சம் மதிப்பிலான 22 ஆயிரத்து 500 குங்கும டப்பாக்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைத்துள்ளோம் என்றனர்.