தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி: மறுக்கும் எம்.எல்.ஏ.; குவியும் கண்டனம்

கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி: மறுக்கும் எம்.எல்.ஏ.; குவியும் கண்டனம்

கலெக்டருக்கு தவறான குறுஞ்செய்தி: மறுக்கும் எம்.எல்.ஏ.; குவியும் கண்டனம்

36


ADDED : நவ 11, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

36

ADDED : நவ 11, 2026 06:21 AM


36
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ், வாட்ஸாப் மூலமாக தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. எம்.எல்.ஏ., மறுத்தாலும், அவருக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிகின்றன.

இப்பிரச்னை குறித்து அருள்விக்னேஷ் கூறியதாவது: நான் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை. இதுபற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. மாவட்டத்தில் த.வெ.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ., நான் தான். இதனால், என் மீது வன்மம் அதிகமாக உள்ளது. தவறு செய்திருந்தால் என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக் கொள்ள தயார். 'இக்னோர் த நெகட்டிவிட்டி' என்ற முதல்வரின் பாலிசியை கடைப்பிடித்து வருகிறேன்.

இது போன்ற கேவலமான விஷயத்தை கையில் எடுத்து என் பெயரையும், கட்சி பெயரையும் களங்கப்படுத்தும் வகையில் தி.மு.க.,வினர் உள்ளிட்ட பலர் செயல்பட்டு வருகின்றனர். கீழ்த்தரமான வேலையை செய்கின்றனர். தமிழகத்தில் முன்னர் தி.மு.க., - அ.தி.மு.க., என, இரண்டு கட்சி தான் என்று கூறினர். த.வெ.க.,வந்ததற்கு பிறகு எல்லா கட்சியும் எங்களுக்கு எதிர்க்கட்சி தான். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து சி.பி.சி.ஐ.டி., அல்லது சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, தி.மு.க., சார்பில், எஸ்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

தலைவர்கள் கண்டனம்


அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: 'உள்ளாடையுடன் நிற்க வைப்பேன்' என, மிரட்டும் அமைச்சர்; மனு கொடுக்க வந்தவரை தாக்கி, ஆபாச அர்ச்சனை செய்து, அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர்; எல்லாவற்றுக்கும் மேலாக, கலெக்டருக்கே ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ., என, த.வெ.க.,வை சேர்ந்தோர், சட்டம் - ஒழுங்கை காக்கும் லட்சணம், பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. நுாலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும், தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க, முதல்வர் பயப்படுகிறாரா.

காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி: தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில், 50 சதவீதம் பேர் பெண்கள். இதுபோன்ற மோசமான செயல்கள், ஆட்சிக்கும், கட்சிக்கும் களங்கம் விளைவிக்கக் கூடியவை. இதை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: மேடைக்கு மேடை பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் இல்லை என, வெட்கமில்லாமல் பேசுவதற்கு முன்பாக, தங்கள் கட்சியில் இருப்பவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை கண்மூடி வேடிக்கை பார்க்காமல், எம்.எல்.ஏ., மீது எழுந்திருக்கும் புகாரை விரிவான விசாரணைக்கு உட்படுத்தி அவருக்கு முதல்வர் விஜய் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

தே.மு.தி.க., தலைவர் பிரேமலதா: பெண்களைப் பாதுகாக்கும் அரசு என்று பெருமை பேசும் முதல்வர் ஆட்சியில், கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது, தமிழக அரசின் நிர்வாக அவலத்தையே வெளிப்படுத்துகிறது.

ஏ.பி.வி.பி., அமைப்பின் மத்திய செயலாக்க குழு உறுப்பினர் வேதாஞ்சலி: கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் கலெக்டருக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வரும் செய்திகள், அதிர்ச்சி தருகின்றன. தமிழகத்தில் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கே, பாதுகாப்பற்ற சூழல் ஏற் பட்டுள்ளதையே, இச்சம்பவம் காட்டுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us