அன்புமணி - ராமதாஸ் மோதலை நிறுத்த குடும்பத்தினர் முயற்சி
அன்புமணி - ராமதாஸ் மோதலை நிறுத்த குடும்பத்தினர் முயற்சி
ADDED : ஏப் 12, 2025 06:07 AM

சென்னை : பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து, அன்புமணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும், ராமதாசுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த, திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிலும், பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிலும், குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பனிப்போர்
தேர்தல் கூட்டணி, நிர்வாகிகள் நியமனம், போன்றவற்றில் முரண்பட்டதால், கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே, பனிப்போர் நீடித்து வந்தது.
நேற்று முன்தினம் அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார்.
இது பா.ம.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டில் குடும்பத்தினர் ஆலோசித்தனர்.
ராமதாஸ் மகள்கள் ஸ்ரீ காந்தி, கவிதா குடும்பத்தினரும், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் உள்ள அன்புமணி வீட்டில், அவரது மனைவி சவுமியா, மருமகன் உள்ளிட்டோரும், ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விருப்பம்
பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, நேற்று ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “யாரும் எதிர்பாராத வகையில், திடீரென ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 45 ஆண்டுகளாக அவருடன் இருக்கிறேன். “ ராமதாஸ், அன்புமணி இருவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; கட்சியை பலப்படுத்த வேண்டும். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்,'' என்றார்.
வெற்றி பெறுமா?
கடந்த டிசம்பர் 28ல், தனது மகள்வழி பேரன் முகுந்தன் பரசுராமனை, பா.ம.க., இளைஞர் அணித் தலைவராக ராமதாஸ் நியமித்தார். அதற்கு அந்த மேடையிலேயே, அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், தனது முடிவில் இருந்து ராமதாஸ் பின்வாங்கவில்லை. தற்போது, அன்புமணியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையை, ராமதாஸ் ஏற்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பா.ம.க., நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'ராமதாஸ் தனது முடிவை, மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை. செயல் தலைவராக அன்புமணி கட்சியை பலப்படுத்தட்டும்.
கூட்டணி உள்ளிட்ட முக்கிய முடிவுகளை நான்தான் எடுப்பேன். செயல் தலைவராக, மே 11ல் நடக்கும் வன்னியர் இளைஞர் ஒற்றுமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்தட்டும் என, தன்னை சந்திப்பவர்களிடம் கூறியுள்ளார். ஆனாலும், குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலர், அன்புமணிக்காக ராமதாசிடம் சமாதானம் பேசி வருகின்றனர்' என்றனர்.

