சொட்டுநீர் பாசன கட்டமைப்பு மோசடி; விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுரை
சொட்டுநீர் பாசன கட்டமைப்பு மோசடி; விவசாயிகள் உஷாராக இருக்க அறிவுரை
ADDED : ஏப் 01, 2025 05:36 AM

திருப்பூர் : விவசாயிகளின் தோட்டங்களில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில், முழு மானியத்தில் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
அரசின் சார்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் வாயிலாக மட்டுமே, உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
மானியத்தில் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தி, ஏழு ஆண்டுகள் கழித்த பிறகே, மீண்டும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்த முடியும் என்ற சூழலில், தற்போது பெரும்பாலான விவசாயிகளின் தோட்டங்களில், சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்தி, ஏழு ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன.
அவர்கள் மீண்டும் சொட்டுநீர் பாசன கட்டமைப்பு வேண்டி விண்ணப்பிக்கத் துவங்கியுள்ளனர்.
இதுபற்றி வேளாண் துறையினர் கூறியதாவது:
சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளை தொடர்பு கொள்ளும் அடையாளம் தெரியாத நபர்கள், ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி, சொட்டுநீர் பாசன உபகரணம் வழங்குவதாகக் கூறி, விவசாயிகளின் விபரம், நிலம் தொடர்பான ஆவணங்கள், சான்றிதழ் உள்ளிட்ட விபரங்களை கேட்கின்றனர்.
'மானிய விலையில் சொட்டுநீர் கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறோம்' என, விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.
அவர்களை நம்பும் விவசாயிகளிடம் இருந்து, பணம் பறிக்கவும் செய்வர். அத்தகைய நபர்களை, விவசாயிகள் நம்ப வேண்டாம்.
சொட்டுநீர் பாசன கட்டமைப்பு ஏற்படுத்த விரும்பும் விவசாயிகள், வேளாண், தோட்டக்கலை துறை அலுவலகம், அவரவர் பகுதியில் பணியாற்றும் வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

