UPDATED : மார் 16, 2024 09:30 AM
ADDED : மார் 15, 2024 10:10 PM

ஓசூர்:கர்நாடகா மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, 112 கி.மீ., பயணம் செய்து, தமிழகத்தின் எல்லையான ஓசூர் வருகிறது.
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 44.28 அடி உயரம் கொண்ட கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும். மற்ற காலங்களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுகள் மட்டுமே ஆற்றில் வரும்.
கெலவரப்பள்ளி அணை ஷட்டர்களை மாற்றும் பணிக்காக, கடந்தாண்டு ஜூன் முதல், 24.27 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீர் முழுதும் தென்பெண்ணை ஆற்றில் வெளியேறி வருகிறது.
கர்நாடகா மாநிலத்தில், கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், தென்பெண்ணை ஆற்றில் சராசரியாக, 200 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அதுவும் தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவுநீர் மட்டுமே கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது. அதனால் அணையை கடந்து, தென்பெண்ணை ஆற்றில் ஓடும் நீர் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது.
இதை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாததால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். மேலும் தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து குறைந்து விட்டதால், ஓடை போல் காட்சியளிக்கிறது.
தற்போது அணையில், 24.27 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. ஷட்டர் பணிகள் காரணமாக, கடந்தாண்டு முதல் போகத்திற்கும், நடப்பாண்டு இரண்டாம் போகத்திற்கும் தண்ணீர் திறக்கவில்லை.
அணை நீரை நம்பியிருந்த, 8,000 ஏக்கர் நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறியுள்ளன.

