அனைத்து சேவைகளையும் எளிதாக பெற உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிமுகம்
அனைத்து சேவைகளையும் எளிதாக பெற உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம் அறிமுகம்
ADDED : ஆக 07, 2026 05:32 AM

'சூப்பர் எல் நினோ' பாதிப்பு
* தமிழகத்தில், 'சூப்பர் எல் நினோ' நிகழ்வால், குறுவை சாகுபடி பருவத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 12 மாவட்டங்களில், அதிக தாக்கம் ஏற்படும் என கணிப்பு.
* தமிழ்நாடு வேளாண்மை பல்கலையால், அனைத்து மாவட்டங்களுக்கும் தயாரிக்கப் பட்டுள்ள, 'மாவட்ட வேளாண்மை இடை ஏற்பாடு திட்டம்' கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றில் குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்த ஏற்பாடுகள் தீவிரம்.
உணவு உற்பத்தி இலக்கு குறைப்பு
* மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 2026 - 27ம் ஆண்டில், 1.25 கோடி டன் இலக்கு.
* ஊட்டச்சத்து வழங்கும் பயறு வகைகள், காய்கறிகள், பழங்களிலும் உற்பத்தியை அதிகரித்து, தன்னிறைவை எட்டி, ஊட்டச்சத்து பாதுகாப்பை அடைய இலக்கு.
மின் கட்டணத்திற்கு ரூ.7,432 கோடி
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மும்முனை மின்சார சேவைக்கு, நடப்பாண்டு இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக, மின் வாரியத்திற்கு, 7,432.58 கோடி ரூபாய்.
மண் வள பாதுகாப்பு இயக்கம்
* மண் வளத்தை பாதுகாக்க, தமிழ்நாடு மண் வள பாதுகாப்பு இயக்கம், 600 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்தாண்டு திட்டமாக அறிமுகம்.
* மண் வளத்தை அறிந்து, அதற்கேற்ப சமச்சீர் உர பயன்பாட்டை ஊக்குவிக்க, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, 4 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் மண் நல அட்டைகள்.
* மண் வளத்தை மீட்டெடுக்க, ஒரு லட்சம் ஏக்கருக்கு தேவையான, தக்கைப்பை பூண்டு, சணப்பு, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உர விதைகள், 22,௦௦௦ ஏக்கருக்கு தேவையான பல்வகை தானிய விதைகள், மானிய விலையில் வினியோகம்.
* வளர்ந்த பசுந்தழைகளை நிலத்திலேயே உழுது மட்க செய்ய, ஏக்கருக்கு 3,000 ரூபாய் உழவு மானியம். தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், நடப்பாண்டு 122.51 கோடி ரூபாயில், 10 கூறுகளுடன் செயல்படுத்த திட்டம்.
நெல் விதை உற்பத்தி மானியம்
* மத்திய அரசால் நெல் விதை உற்பத்திக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசால், நெல் விதை உற்பத்தி மானியம் வழங்க, நடப்பாண்டு 34.72 கோடி ரூபாய் செலவிட முடிவு.
உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம்
* அரசு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும், விவசாயிகள் தங்கள் மொபைல் போன் வழியாக எளிதாகப் பெற, நடப்பாண்டில், 'உழவர் செயற்கை நுண்ணறிவு திட்டம்' 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த திட்டம்.
பருப்பு வகைகள் உற்பத்தி திட்டம்
* பருப்பு வகைகளில், 65.28 கோடி ரூபாய் செலவிலும், உணவு எண்ணெய் வித்துகளில், 138.36 கோடி ரூபாய் செலவிலும், மத்திய, மாநில நிதி ஒதுக்கீட்டில், பருப்பு வகைகள் மற்றும் உணவு எண்ணெய் வித்துகளில் தன்னிறைவுக்கான இயக்கம்.
சிறுதானிய இயக்கம்
* தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், 63.81 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்த முடிவு. மேலும், 29 மாவட்டங்களில், தமிழ்நாடு குறுதானிய இயக்கம்.
புதிய பயிர்கள் அறிமுகம்
* அதிக ஊட்டச்சத்து நிறைந்த சீமைத் தினை, பாப்பரை, குலசாமை ஆகிய பயிர்களை அறிமுகப்படுத்த திட்டம். அவற்றை சாகுபடி செய்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலை கொண்ட நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில், 30 லட்சம் ரூபாயில் செயல் விளக்கத் திடல்கள்.
* பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், நடப்பாண்டு முதல் ஐந்தாண்டு திட்டமாக செயல்படுத்த திட்டம். இந்த திட்டத்தால் நடப்பாண்டு 73,360 ஏக்கர் பரப்பளவில், 27.21 கோடி ரூபாயில், 40,000 பருத்தி விவசாயிகள் பயன் பெறுவர்.
மக்காச்சோளம் மேம்பாட்டு திட்டம்
* கோழித்தீவனம் மற்றும் எத்தனால் தொழிற்சாலைகளில், மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம், 3.47 லட்சம் ஏக்கர் பரப்பளவில், 1.39 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 36 கோடி ரூபாயில் செயல்படுத்த திட்டம்.
