மண் எடுத்து விற்றது ஒருவர் அபராதம் வேறொருவருக்கா? கோவையில் கொதிக்கும் விவசாயிகள்
மண் எடுத்து விற்றது ஒருவர் அபராதம் வேறொருவருக்கா? கோவையில் கொதிக்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 29, 2025 03:39 AM

கோவை : கோவை, பேரூர் தாலுகாவுக்குட்பட்ட ஆலாந்துறை, மாதம்பட்டி, தென்கரை, தொண்டாமுத்துார் உட்பட சுற்றுவட்டார கிராம விவசாய நிலங்களில், கனிமவளத்தை விவசாயிகள் கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக புகார் தெரிவித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மலையை ஒட்டிய பகுதிகளில் விளைநிலங்கள் உள்ள விவசாயிகள், தரிசுநில மேம்பாட்டு திட்டத்தில், விளைநிலங்களாக மாற்ற, நிலத்தை சமன் செய்வது வழக்கம்.
அவ்வாறு சமன்படுத்தும் பணியின்போது மண் எடுத்த ஒப்பந்ததாரர்கள், தரிசாக கிடந்த பல ஏக்கர் நிலங்களில், பல அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்துவிட்டனர்.
தற்போது, அதுபோன்ற நிலங்களையும் ஆய்வு செய்து, நில உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், 'எங்கள் நிலத்தில் எங்களுக்கே தெரியாமல் மண் எடுத்தது ஒருவர்; அபராதம் எங்களுக்கா?' என, விவசாயிகள் கொதிக்கின்றனர்.
மேலும், 15 ஆண்டுகளாக பேரூர் தாலுகாவுக்குட்பட்ட, நொய்யல் ஆற்றுப்படுகையில் கனிமவள கொள்ளை நடந்து வந்தது. அப்பகுதிகளில் இருந்து மணல் எடுப்பதையும், விற்பனை செய்வதையும் ஒரு சிலர் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பலமுறை, மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர், விவசாயிகள்.
விவசாயிகளான தீத்திபாளையம் பெரியசாமி, செம்மேடு செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், “அரசியல்வாதிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து, அத்துமீறி கனிமவளங்களை கொள்ளையடித்துச் சென்றபோது கோட்டைவிட்ட அதிகாரிகள், தற்போது கோர்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டவுடன், அப்பாவி விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர்,” என்றனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

