ADDED : ஏப் 11, 2025 04:29 AM

மகன் அன்புமணியை நீக்கி விட்டு, பா.ம.க.,வுக்கு இனி நானே தலைவர் என அறிவித்துள்ள ராமதாஸ் முடிவால், இருவரில் யார் பக்கம் நிற்பது என்பது தெரியாமல், அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, 2022 மே, 28ம் தேதி, கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவர் பதவி வந்து விட்டதால், தனித்து செயல்பட விரும்பினார். ஆனால், மகன் தலைவரான பின்னும், ராமதாஸ் வழக்கம் போல, திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட, அவரே நியமனம் செய்கிறார். இதனால், இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்தது.
கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில், கூட்டணி தொடர்பாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், ராமதாஸ் பேச்சு நடத்திக் கொண்டிருந்தார். ஆனால், அமித்ஷாவிடம் பேசி, தைலாபுரம் தோட்டத்திற்கு விடியற்காலையில் அண்ணாமலையை வரவழைத்து, பா.ஜ.,வுடன் அன்புமணி கூட்டணி வைத்து விட்டார். ஆனாலும், தர்மபுரியில் கூட பா.ம.க., வெல்லவில்லை. இதனால், அன்புமணி மீது ராமதாஸ் கடும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 2024 டிசம்பர் 28ல், புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தனது மகள் வழி பேரன் முகுந்தன் பரசுராமனை, கட்சியின் இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்தார். இதற்கு, அந்த மேடையிலேயே அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க, தந்தை -- மகன் மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. அதன்பின், சென்னையை அடுத்த பனையூரில் தனி அலுவலகம் அமைத்து, அன்புமணி செயல்பட்டு வருகிறார். அன்புமணிக்கு விருப்பம் இல்லாததால், ராமதாஸ் அறிவித்தும் அவரது பேரனால், இளைஞரணி தலைவர் பதவியில் செயல்பட முடியவில்லை.
இந்நிலையில் தான் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, நானே தலைவர் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுபற்றி, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டணி என்றால், தி.மு.க., அல்லது அ,தி.மு.க., தான் என்ற முடிவில் ராமதாஸ் உறுதியாக இருந்தார். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல், பா.ஜ.,வுடன் அன்புமணி கூட்டணி வைத்ததும், அதில் தோல்வி கிடைத்ததும் ராமதாசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ராஜ்யசபாவில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஓட்டளிக்குமாறு, ராமதாஸ் கூறியிருந்தார். அதை ஏற்காமல், ஓட்டெடுப்பை புறக்கணித்தார் அன்புமணி. இதிலும், ராமதாசுக்கு உடன்பாடு இல்லை.
வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சித்து வருகிறது. இதற்காக நேரில் களமிறங்கியுள்ள அமித்ஷா சென்னை வரும் போது, அன்புமணி சந்திக்கக் கூடும் என்ற தகவல் ராமதாசுக்கு கிடைத்தது. இதை தடுப்பதற்காகவே, தலைவர் பதவியில் இருந்து நீக்கி, தன்னை தலைவராக அறிவித்திருக்கிறார்.இனி அன்புமணி தான் எதிர்காலம் என, நிர்வாகிகள் அவர் பக்கமே நின்றனர். இப்போது அவர் நீக்கப்பட்டு உள்ளதால், தந்தை,- மகன் இருவரில் யார் பக்கம் நிற்பது என, தெரியாமல் பெரும்பாலான நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

