மழை பாதிப்புகளை சீரமைக்க நிதி தர மறுக்கும் நிதித்துறை
மழை பாதிப்புகளை சீரமைக்க நிதி தர மறுக்கும் நிதித்துறை
ADDED : டிச 28, 2024 12:55 AM

சென்னை: 'பெஞ்சல்' புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தற்காலிகமாக சீரமைக்க, தமிழக நிதித்துறை நிதி வழங்க மறுத்து விட்டதால், பல துறைகள் தவித்து வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபரில் துவங்கி பெய்து வருகிறது. கனமழை மற்றும் பெஞ்சல் புயலால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், தென்காசி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகள், பாலங்கள்; உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள சாலைகள்; நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள நீர் சேமிப்பு மற்றும் நீர் வெளியேற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
வேளாண்மை, தோட்டக்கலை பயிர்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் பயன்பாட்டிற்கான கட்டடங்கள், பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் போன்றவையும் சேதம் அடைந்துள்ளன.
மழை மற்றும் புயல் பாதிப்புக்கு பின், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீர் சேமிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும் போது, மழை ஓய்ந்த பின், அவை தற்காலிகமாக சீரமைக்கப்படும். இதற்காக தற்காலிக சீரமைப்பு நிதியை அரசு வழங்கும். இம்முறை தற்காலிகமாக சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக, 900 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது.
ஆனால், நிதி நெருக்கடி காரணமாக, தற்காலிக சீரமைப்பு பணிக்கு, நிதி வழங்க முடியாது என, நிதித்துறை மறுத்து விட்டது. இதனால், சேதங்களை தற்காலிகமாக சீரமைக்க முடியாமல், பல துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, ஊரக உள்ளாட்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதி நெருக்கடியால், தற்காலிக சீரமைப்புக்கு நிதி வழங்க முடியாது என, நிதித்துறை வாயிலாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக, துறை சார்ந்த திட்டங்கள் வாயிலாக நிரந்தர சீரமைப்பு பணிக்கு நிதி வழங்கப்படும் என, உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த பின்னரே, பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்கு பல மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். சாலைகள், குடிநீர், உள்கட்டமைப்புகள் சீரமைப்பு பணிகளை, உடனடியாக துவக்காவிட்டால் மக்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
இதனால், என்ன செய்வது என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

