'சர்வர்' பாதிப்பால் விரல் ரேகை பதிவு தாமதம்; பொங்கல் பரிசு வாங்க காத்து கிடக்கும் மக்கள்
'சர்வர்' பாதிப்பால் விரல் ரேகை பதிவு தாமதம்; பொங்கல் பரிசு வாங்க காத்து கிடக்கும் மக்கள்
UPDATED : ஜன 10, 2026 05:48 AM
ADDED : ஜன 10, 2026 05:18 AM

சென்னை: ரேஷன் கடைகளின் விற்பனை முனைய கருவியின், 'சர்வர்' பாதிப்பால், இரண்டாவது நாளாக, கார்டுதாரர்களின் விரல் ரேகை சரிபார்த்து, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தாமதமாகிறது.
இதனால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதால் ஊழியர்களும், கார்டுதாரர்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக ரேஷன் கடைகளில் பொங்கலை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, 3,000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை அடங்கிய பரிசு தொகுப்பை, அரசு வழங்குகிறது.
வேகம் குறைவு
தினமும் ஒரு கடையில் காலை, மாலையில் தலா, 100 - 150 கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, 'டோக்கன்'கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கு ஏற்ப, கார்டுதாரர்களும் நேற்று காலை ரே ஷன் கடைகள் திறப்பதற்கு முன் சென்று, நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல கடைகளில், 'சர்வர்' பாதிப்பால், பி.ஓ.எஸ்., கருவிகள் இயக்க வேகம் மிகவும் குறைவாக இருந்தது.
இதனால், விரல் ரேகையில், 'ஆதார்' சரிபார்ப்பு பணியில் தாமதம் ஏற்பட்டதால், கார்டுதாரர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் தலைவர் சடகோபன் கூறுகையில், ''ரேஷன் கடைகளில் சர்வர் பாதிப்பால், கருவியில் விரல் ரேகை சரிபார்ப்பு பணி மிகவும் தாமதமாகிறது.
''நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி இருப்பதாக, கார்டுதாரர்கள் புகார் தெரிவித்தனர். இதை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் தீர்வு கிடைக்கவில்லை,'' என்றார்.
இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச் செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:
பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் துவங்கிய முதல் நாளே, பல கடைகளில் பி.ஓ.எஸ்., கருவிகள் சரிவர செயல்படவில்லை. நேற்று காலை, 10:00 மணிக்கு மேல் கருவிகள் இயங்கவில்லை.
10 நிமிடம்
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சர்வர் பாதிப்பு' என்றனர். புகார் மையத்தில் தொடர்பு கொண்டால், 'சிரமத்திற்கு வருந்துகிறோம்' என்று தகவல் வருகிறது. கருவியை தொடர்ந்து இயக்கியும், வேகம் குறைவாகவே செயல்படுகிறது. இதனால், ஒருவரின் விரல் ரேகை பதிவு செய்து முடிக்க, 10 நிமிடம் மேலாகிறது.
இதனால், கார்டுதாரர்களுக்கு பொருள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இன்று முதல் காலை, 6:00 மணிக்கு கடையை திறந்து, பரிசு தொகுப்பு வழங்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒரே சமயத்தில் பலருக்கும் விரல் ரேகை பதிவு செய்வதால், சர்வர் வேகம் குறைகிறது. சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது' என்றார்.

