'கான்டாக்ட் லென்ஸ்' அணிந்து பட்டாசு வெடித்தால் ஆபத்து
'கான்டாக்ட் லென்ஸ்' அணிந்து பட்டாசு வெடித்தால் ஆபத்து
UPDATED : அக் 30, 2024 05:13 AM
ADDED : அக் 29, 2024 11:55 PM

சென்னை: பார்வை திறனுக்காக, 'கான்டாக்ட் லென்ஸ்' அணிந்திருப்போர், அதை அகற்றாமல், பட்டாசு வெடிக்கக்கூடாது. கண்களை பாதுகாக்கும் கண்ணாடி அணிந்து வெடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவ சேவை பிராந்திய தலைவர் சவுந்தரி கூறியதாவது: சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான பட்டாசுகள், அதீத ரசாயனம் உடையவையாக உள்ளன. அவை வெடிக்கும் போது, தங்கம், வெள்ளியை உருக்க தேவையான, 1,800 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வெளியேறுகிறது.
பொதுவாக பட்டாசு விபத்துகள் நேரிடும் போது, அதிகம் காயம் ஏற்படுவது கைகளில் தான். அதற்கு அடுத்தப்படியாக, கண்களில் வெடித் துகள்கள் பட்டு காயம் ஏற்படுத்துகின்றன. அவை, கண்களின் இமைப் பகுதிகள், விழிப்படலம், கண் நரம்புகளை பாதிக்கின்றன. உரிய நேரத்தில் சிகிச்சை பெறாவிடில், பார்வை இழப்பு, பார்வை திறன் குறைபாடு, விழித்திரை பாதிப்பு ஏற்படும்.
கண்களில் தீப்பொறி அல்லது வெடிச்சிதறல் பட்டால், கண்களை அழுத்தி தேய்க்கவோ, கசக்கவோ கூடாது. காயம் இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும் கூடாது. வலி நிவாரண மருந்துகள் சுயமாக எடுத்து கொள்ளக்கூடாது. அவை பாதிப்பை அதிகரிக்க கூடும்.
துாய்மையான நீரில், கண்களை திறந்த நிலையில், சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அந்த நிலையிலேயே மென்மையாக கழுவ வேண்டும். பின், தாமதிக்காமல், டாக்டரிடம் செல்ல வேண்டும்.
'கான்டாக்ட் லென்ஸ்' பொருத்தியிருப்போர், அதை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும் போது, இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தொடர்ந்து வெப்பமான சூழலில், 'கான்டாக்ட் லென்ஸ்' இருக்கும் பட்சத்தில், கண்களுக்கு பல்வேறு எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, லென்ஸ்களை கழற்றி விட்டு, பாதுகாப்பாக கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். அவசர தேவைக்கு, 95949 24048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

