UPDATED : அக் 24, 2025 01:43 AM
ADDED : அக் 24, 2025 01:37 AM

தமிழக தொல்லியல் துறை சார்பில், பூம்புகாரில் முதல்கட்ட கடலாய்வு பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியத்தில், காவிரி ஆறு கடலுடன் கலக்கும் இடத்தில், காவிரிபூம்பட்டினம் எனும் பூம்புகார் அமைந்துள்ளது. சங்க காலத்தில், சோழர்களின் துறைமுக நகராகவும், இரண்டாம் தலைநகராகவும் இருந்தது.
கீழர்வேலி அதன்பின் கடல்கோள் எனும் சுனாமியால் அழிந்ததாக கூறப்படுகிறது. இப்பகுதியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், கீழர்வேலி, தர்மகுளம் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டது.
அப்போது, கீழர்வேலியில், 20 செ.மீ., ஆழத்தில், வடகிழக்கு - தென்மேற்கு திசையில், இரண்டு செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தற்போது, பூம்புகார் முதல் நாகப்பட்டினம் கடற்கரை வரை, அகழாய்வு செய்வதற்கான அனுமதியை, மத்திய அரசிடம், தமிழக தொல்லியல் துறை பெற்று உள்ளது.
முதல் கட்டமாக, தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய கடல் ஆய்வு பல்கலைகளின் உதவியுடன், முதல்கட்ட கடலாய்வுப் பணியை முடித்து உள்ளது.
திருமுல்லைவாசல் முதல் நெய்தவாசல் வரை, இரண்டு வாரங்கள் நடந்த ஆய்வில், மீனவர்கள் உதவியுடன், 10 'டைவர்'கள், நான்கு பயிற்சி பெற்ற தொல்லியல் துறையினர் கடல் ஆய்வில் ஈடுபட்டனர்.
இந்த ஆய்வுக்காக தொலைதுாரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் ரிமோட் வாகனம், பல்வேறு அம்சங்களுடன் கூடிய, 'சோனார் ஸ்கேனர்'கள் பயன் படுத்தப்பட்டுள்ளன.
திட்டம் இந்த ஆய்வின் போது கண்ட தொல்பொருட்கள், சக்தி வாய்ந்த கேமராக்கள் வாயிலாக புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது, அவற்றை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது.
இவற்றில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் உள்ள பகுதிகளில், கடல் அமைதியாகவும் ஒளி ஊடுருவும் வகையிலும் இருக்கும் காலமான, ஜன., முதல் ஏப்., வரை, விரிவான கடலடி அகழாய்வு நடத்த, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
- நமது நிருபர் -

