ADDED : மார் 18, 2024 12:53 AM

சென்னை, சேலம், ஈரோடு, நாமக்கல், வேலுார், கரூர் மாவட்டங்களில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், ஒரே நாளில் 2 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தமிழகம் முழுதும், 702 பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில், 16 பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 3:00 மணியில் இருந்து, தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் நேற்று காலை பாரிமுனை என்.சி.போஸ் சாலையில், சந்தேகப்படும்படி சென்ற சவுகார்பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், 24, என்பவரிடம் விசாரித்து, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 10.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
1.42 கோடி ரூபாய்
முன்னதாக பறக்கும் படை அதிகாரிகள், சவுகார்பேட்டை வணிக வளாக பகுதியில் சுற்றிய இருவரிடம் விசாரித்து, 1.42 கோடி ரூபாயையும், பாரிமுனை பகுதியில் 15 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை உட்பட மாநிலம் முழுதும் நேற்று மாலை 5:00 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், 2 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு ஈரோடு குமலன்குட்டையில் டயர் வியாபாரி சசியிடம் 2.37 லட்சம் ரூபாயையும், நேற்று காலை வெட்டுக்காட்டுவலசு பகுதியில் சூரம்பட்டியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வடிவேலிடம் 3 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
வேலுார் மாவட்டம் அணைக்கட்டை சேர்ந்தவர் முட்டை வியாபாரி விஜயன், 41. இவர், நாமக்கல் சென்று முட்டை கொள்முதல் செய்து வர, 2 லட்சத்து, 1,900 ரூபாயுடன் மினி லாரியில் சென்றார். ஜோலார்பேட்டை அடுத்த செட்டியப்பனுாரில் தேர்தல் பறக்கும் படை குழுவினர், விஜயன் சென்ற மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற 2 லட்சத்து, 1,900 ரூபாயை பறிமுதல் செய்து, நாட்றம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வாகன தணிக்கை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, கருமந்துறையைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம், 50, என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 3 லட்சம் ரூபாய் இருந்தது.
அந்தப் பணத்திற்கு ரசீது எதுவும் இல்லை என்பதால் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஜீவா தெருவைச் சேர்ந்த கலைவாணன் என்பவரிடமிருந்து 4.80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
இதேபோல், கோவை மாவட்டம், கோபாலபுரம் அருகே எலுமிச்சை பழ வியாபாரியிடம், ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வந்த 30 லட்சம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக தம்பதி கலங்கடிப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே பறக்கும் படை அதிகாரி ராகுல் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது. கர்நாடக மாநிலம் சிமோஹாவைச் சேர்ந்த விஜயேந்திர ராவ், 61, அவரது மனைவி வித்யாவதி காரில் வந்தனர்.
அவர்களிடம், 40,230 ரூபாய், ஒரே மாதிரியான 89 புடவைகள், ஆறு சுடிதாரை பறிமுதல் செய்தனர். இவற்றை தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணனிடம்ஒப்படைத்தனர்.
இது குறித்து விஜயேந்திர ராவ் கூறியதாவது:
என் மகன் திருமணத்துக்காக புடவை, சுடிதார் எடுத்துக் கொண்டு, ரயிலில் கர்நாடகா செல்லச் சென்றோம். இவற்றுக்கு பில் உள்ளது.
என்னிடம் இருந்த 40,230 ரூபாயையும் பறிமுதல் செய்து விட்டனர். தண்ணீர், டீ குடிக்கக் கூட பணமில்லாதபடி அராஜகமாக நடந்து கொண்டனர்.
இவ்வாறு கூறினார்.
இது பற்றி தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'முன்னுக்கு பின் முரணாக பணம், புடவை பற்றி கூறினர். பில், கடை விபரம், ஜி.எஸ்.டி., விபரமின்றி பெட்டிக்கடை பில் போல உள்ளதால் கைப்பற்றினோம். உரிய ஆவணம் வழங்கினால் விடுவிக்கப்படும்' என்றனர்.
ஐ.டி.,யில் 24 மணி நேரகட்டுப்பாட்டு அறை திறப்பு
லோக்சபா தேர்தலுக்காக, வருமான வரித்துறை சார்பில், 24 மணி நேரமும் செயல்படும் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
தனி நபர் அல்லது கட்சி, நேரடியாக, மறைமுகமாக, பணம் அல்லது இலவசப் பொருட்கள் வழங்குவது குறித்து புகார் அல்லது தகவல் தெரிவிக்க விரும்பினால், வருமான வரி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்காக, கட்டணமில்லா டெலிபோன் எண், வாட்ஸாப் எண், இ - மெயில் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
பணம் பட்டுவாடா புகார்களை தெரிவிக்க, 18004256669 மற்றும் 94453 94453 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்
- நமது நிருபர் குழு -.

