UPDATED : மே 08, 2025 06:46 AM
ADDED : மே 08, 2025 12:34 AM

பொது சுகாதாரத் துறையிலிருந்து (டி.பி.எச்.,) தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள், மாவட்ட நியமன அலுவலர்களுக்கு 15 ஆண்டுகளாக பணி நிரந்தரமோ, பதவி உயர்வோ வழங்கப்படவில்லை.
2011 ல் உணவுப்பாதுகாப்புத்துறை உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரத் துறையின் கீழ்ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வந்த டாக்டர்கள்உணவுப்பாதுகாப்புத்துறைக்கான மாவட்ட நியமன அலுவலர்களாக தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பயோகெமிஸ்டரி, உணவுத்தொழில்நுட்பம், மைக்ரோபயாலஜி படித்து சுகாதார ஆய்வாளர், தொழுநோய் பிரிவு ஆய்வாளர், சானிட்டரி ஆய்வாளர்களாக பணியாற்றியவர்கள் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களாக (எப்.எஸ்.ஓ.,) நியமிக்கப்பட்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மீதியுள்ளமாவட்டங்களில் 32 மாவட்ட நியமன அலுவலர்கள், 250க்கும் மேற்பட்ட எப்.எஸ்.ஓ.,க்கள் பணிபுரிகின்றனர். 2011 ல் துறை உருவாக்கப்பட்டாலும் தற்போது வரை பணிநிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனர் இத்துறையினர்.
அவர்கள் கூறியதாவது:
டாக்டர்கள் பணி நியமனம் பெற்று ' உதவி சர்ஜனாக' சேர்ந்த 9 ஆண்டுகளில் 'சீனியர் உதவி சர்ஜனாக' பதவி உயர்வு பெறமுடியும். அடுத்து 12 ஆண்டுகள், 15, 17 ஆண்டுகளில் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் கிடைக்கும்.
ஆரம்ப சுகாதார பிரிவில் இருந்து உணவுப்பாதுகாப்புத்துறைக்குமாற்றப்பட்டு 15 ஆண்டுகளாகியும் எங்களுக்கான பதவி உயர்வு வழங்கவில்லை.
மாவட்ட நியமன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எங்கள் துறைக்குள் மாற்றம் செய்யாமல் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுவது தவறான முன்னுதாரணம். எப்.எஸ்.ஓ.,க்களில் பலர் பதவி உயர்வு பெறாமலேயே பணிஓய்வும் பெறுகின்றனர்.
தனித்துறைக்கான அரசாணை உருவாக்கி உணவுப்பாதுகாப்புத்துறையின் கீழ் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் மாவட்ட நியமன அலுவலர்கள், எப்.எஸ்.ஓ.,க்கள் நியமிக்க வேண்டும் என்றனர்.
- நமது நிருபர்-