ADDED : அக் 13, 2024 05:13 AM

அடர்த்தியான மக்கள் கூட்டம்; நெரிசலுக்கு மத்தியில் நடமாட்டம்; இரைச்சல் குறையாத வாகன பயணம் என, பரபரப்பான தொழில் நகரான திருப்பூரில், எழில் சூழ்ந்த பகுதியாக நஞ்சராயன் குளம் காட்சியளிக்கிறது.
இதுவரை, 250 வகைக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளின் காலடி தடம்பட்ட இக்குளம், 'பறவைகள் சரணாலயம்' என்ற அந்தஸ்துடன், திருப்பூருக்கு மட்டுமின்றி, மாநிலத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
அக்டோபர் துவங்கி நவம்பர் வரை குளிர்காலம்; அதுவும், ஐரோப்பா கண்டத்தின் பல இடங்களில் கடுங்குளிரும், உறைபனியும் நிலவும். பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்களாக விளங்கும் அந்நாட்டு பறவைகள், குளிரில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல நாடுகளுக்கு வலசை செல்லும்.
வலசை வரும் பல வெளிநாட்டு பறவைகள், நஞ்சராயன் குளத்துக்கும் விருந்தாளிகளாக வந்து போவதுண்டு. மத்திய ஆசிய நாடுகள், வட ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து, கடந்தாண்டு, 45 இனங்களை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பறவைகள் நஞ்சராயன் குளத்துக்கு வந்துள்ளதாக, கணக்கெடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சில வகை புதிய பறவையினங்களும் வந்து செல்கின்றன.
அதிகப்படியாக, பட்டை தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், இலுவை, நீலச்சிறகு வகை வாத்து இனங்களின் அதிக எண்ணிக்கையில் வந்து செல்லும். அதே போன்று, ஏராளமான 'உள்ளான்' வகை பறவையினங்களும் குளத்துக்கு வந்து செல்லும்.