த.வெ.க.,வுக்கு தாவியும் பதவியின்றி பரிதவிக்கும் அதிமுக 'மாஜி'க்கள்
த.வெ.க.,வுக்கு தாவியும் பதவியின்றி பரிதவிக்கும் அதிமுக 'மாஜி'க்கள்
ADDED : ஆக 29, 2026 05:41 AM

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து, கட்சி மாறி வந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு, பதவிகளை கொடுக்காமல், த.வெ.க., காலம் தாழ்த்தி வருகிறது.
சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க.,வில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் விலகி, த.வெ.க.,வில் இணைந்து வருகின்றனர். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, கட்சியில் இணைந்தவர்களுக்கு, த.வெ.க.,வில் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சில பிரமுகர்களுக்கு, எவ்வித பதவியும் த.வெ.க.,வில் வழங்கவில்லை. இதனால், அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இது குறித்து, த.வெ.க.,வில் இணைந்த சிலர் கூறியதாவது: த.வெ.க.,வில் இணையும் முன், நடந்த பேச்சின்போது, 'கட்சி பதவி தருகிறோம்; வாரிய பதவி தருகிறோம்' என, ஆசை வார்த்தை காட்டினார்கள். அதனால், அ.தி.மு.க.,வில் கட்சி பதவிகளை உதறி விட்டு, த.வெ.க.,வில் இணைந்தோம்.
ஆனால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தவர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு இல்லை. ஆரம்பத்தில், கட்சி நிகழ்ச்சிகளில் முன்னுரிமை கிடைத்தது. தற்போது, பதவி இல்லாததால், மரியாதையும் முன்னுரிமையும் குறைந்து வருகிறது.
அதே நேரத்தில், அமைச்சர்களின் சிபாரிசால் தொழிலுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதையே காரணமாக வைத்து, பதவி கேட்கும் போதெல்லாம், 'அதுதான் தொழில் நல்லா நடக்கிறதே' என தட்டிக்கழிக்கின்றனர்.
வாரிய பதவி கேட்டால், 'அதை, முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்' என, மழுப்புகின்றனர். பல ஆண்டுகளாக பதவியில் இருந்து விட்டு, தற்போது சும்மா இருப்பதாலும், எங்களை நம்பி வந்தவர்களுக்கும் பதவி வாங்க முடியாததாலும், கட்சிக்குள்ளும் வெளியிலும் மரியாதை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
