இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் புகழாரம்
இந்தியாவின் இரும்பு மனிதர் அமித் ஷா: முன்னாள் அமைச்சர் உதயகுமார் புகழாரம்
ADDED : மார் 28, 2025 06:28 AM

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இந்தியாவின் இரும்பு மனிதர் என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் புகழ்ந்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தமிழகத்தின் இரும்பு மனிதரும், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலருமான பழனிசாமி சந்தித்து பேசியது குறித்து பல கருத்துகள் எழுந்து உள்ளன.
தமிழகத்திற்கு தேவையான உரிமைகளை பெற்று தருவதற்காகவே இந்த சந்திப்பு நடந்தது. அமித் ஷாவை சந்தித்தபோது, தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் நிலுவை தொகை, கல்வி திட்ட நிதி, மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவற்றை தமிழக அரசுக்கு உடனே வழங்க வேண்டும்.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும். தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது.
தமிழகத்தில் நீர் பற்றாக்குறையை போக்க, நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். டாஸ்மாக் ஊழலில், யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்க வேண்டும் என, அமித் ஷாவிடம் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தை கடனில் மூழ்க வைத்து முதல்வர் ஸ்டாலின் ஒரு வெற்று விளம்பர பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து அ.தி.மு.க.,வினர் திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் நீதி கேட்க வேண்டும்.
ஆட்சி அதிகாரம் கையில் இல்லாவிட்டாலும், பழனிசாமி மக்களுக்காக உழைத்து வருகிறார் என்பதற்கு அமித் ஷாவுடனான சந்திப்பின் போது, அவர் வலியுறுத்திய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளே சாட்சி.
இனி, ஒரு குடும்பத்தின் பின்னால் இருக்கும் தமிழகத்தை மீட்க வேண்டும். பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். இதை, ஜெயலலிதா பேரவை தொண்டர்கள், திண்ணை பிரசாரத்தின் வாயிலாக, மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.