பல் துலக்குவது முதல் துாங்கும் வரை வேலை; 'பூத்' கமிட்டியினரை வறுத்தெடுக்கும் மா.செ.,க்கள்
பல் துலக்குவது முதல் துாங்கும் வரை வேலை; 'பூத்' கமிட்டியினரை வறுத்தெடுக்கும் மா.செ.,க்கள்
ADDED : ஏப் 13, 2026 05:25 AM

சென்னை: 'வாக்காளர்களிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை; அவர்கள் காலையில் பல் துலக்குவது முதல், அலுவலகத்தில் இருந்து இரவு வீடு திரும்பும் வரை, நேரில் சந்தித்து வணக்கம் சொல்ல வேண்டும்.
'அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்' என, 'பூத்' கமிட்டி பொறுப்பாளர்களை, தி.மு.க., மாவட்டச் செயலர்கள் வறுத்தெடுத்து வருவதால், பலர் அதிருப்தியில் உள்ளனர்.
துண்டறிக்கை
இது குறித்து, தி.மு.க., பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூறியதாவது: சட்டசபை தேர்தல், வரும் 23ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 75,097 ஓட்டுச்சாவடிகளிலும் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கு, 'பூத் கமிட்டி' பொறுப்பாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் குறித்த முழு விபரமும் தெரியும். ஒவ்வொருவரும் எந்த கட்சிக்கு ஆதரவானவர்கள் என்பதையும் அறிந்து வைத்திருப்பர்.
வாக்காளர்களிடம் பிரசாரம் செய்வதற்காக, பூத் கமிட்டியில் உள்ள 10 முதல் 12 பேருக்கு சேர்த்து, மாதம் 20,000 ரூபாய் வரை, கடந்த மூன்று, நான்கு மாதங்களாக, தி.மு.க., தரப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், வாக்காளர்களை சந்தித்து துண்டறிக்கை தருகின்றனர்.
தொழில் பாதிப்பு
இந்த சூழலில், 'நீங்கள் வாக்காளர்களிடம், திட்டு வாங்கினாலும் பரவாயில்லை. தங்கள் பூத்திற்கு உட்பட்ட வாக்காளர்கள் ஒவ்வொருவரின் வீட்டிற்கும், தினமும் காலை அவர்கள் பல் துலக்குவது முதல், வேலை முடித்து இரவு வீடு திரும்பும் வரை, அவர்களை நேரில் சந்தித்து வணக்கம் சொல்ல வேண்டும்.
'அவர்களுக்கு ஏதாவது வேலை இருந்தால், அதை செய்து தர வேண்டும்; தேர்தல் முடியும் வரை, அவர்களுடன் தினமும் தொடர்பில் இருக்க வேண்டும்' என, மாவட்டச் செயலர்கள் கூறியதாக, வார்டு, பகுதிச் செயலர்கள் கூறுகின்றனர்.
'தினமும் எத்தனை பேரை சந்தித்தீர்கள் என்ற விபரத்தை, பெயர், மொபைல் போன் எண்ணுடன் எழுதித் தர வேண்டும்' என்கின்றனர். சொந்த கட்சியினரையே நம்பாமல், இப்படி சிரமம் தருகின்றனர். இதனால், வேலைக்கு செல்ல முடியாமல், எங்களின் தொழில் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
