டில்லி உஷ்ஷ்ஷ்: நிதி ஒதுக்கீடு: மோடி சொன்ன 'நச்' பதில்!
டில்லி உஷ்ஷ்ஷ்: நிதி ஒதுக்கீடு: மோடி சொன்ன 'நச்' பதில்!
UPDATED : பிப் 04, 2024 12:35 AM
ADDED : பிப் 03, 2024 08:02 PM

மத்திய அரசு எங்களுக்கு நிதி ஒதுக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறது' என, தி.மு.க., தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இதற்கான ஆதாரங்கள் எதையும் காட்டாமல், வெறும் வாய் பேச்சாகவே இருந்து வருகிறது; இதே பாணியை தான் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் கடைப்பிடித்து வருகிறார்.
மத்திய அரசை எதிர்த்து தெருவில் போராட்டமே நடத்தி வருகிறார் மம்தா. 18 ஆண்டுகளுக்கு முன் சிங்கூர் என்கிற இடத்திலிருந்து டாடா கார் கம்பெனியை விரட்ட, ஒரு மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்; இது மம்தா வெற்றி பெற்று முதல்வராக வழி செய்தது.இந்த விஷயத்தை பார்லிமென்டிற்கு எடுத்துச் சென்றார், மம்தா கட்சியின் எம்.பி., சுதிப் பந்தோபாத்யாயா. 'மத்திய அரசு ஏன் எங்கள் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது?' என, பிரதமர் மோடியிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார்.
இதற்கு உடனே, 'தலைமை கணக்கு தணிக்கையாளர் எனப்படும், சி.ஏ.ஜி., அறிக்கை, உங்கள் மாநிலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை படியுங்கள்; பின் இதைப் பற்றி பேசலாம்' என, சிரித்துக் கொண்டே சொன்னாராம் மோடி. மத்திய அரசு தரும் நிதியை, மாநிலங்கள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதை மத்திய அரசுக்கும், தணிக்கை அமைப்பிற்கும் தெரிவிக்க வேண்டும். 'மத்திய அரசு 2021- - 22ல் 2.29 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது.அது எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை, மம்தா அரசு தெரிவிக்கவில்லை' என, தணிக்கை அறிக்கை கூறியுள்ளது.
இதைத் தான் மம்தா எம்.பி.,யிடம் சொல்லியிருக்கிறார் பிரதமர். இதை மம்தாவிடம் எம்.பி., சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் அமைதியாக இருந்தாராம் மம்தா.