அமித் ஷாவை சந்தித்ததாலேயே தமிழகத்துக்கு நிதி வந்தது: பழனிசாமி
அமித் ஷாவை சந்தித்ததாலேயே தமிழகத்துக்கு நிதி வந்தது: பழனிசாமி
ADDED : ஜூலை 16, 2025 02:44 AM

பெரம்பலுார்: ''தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும்,'' என்று, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி பேசினார்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னத்தில் நடந்த, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:
ஏழை மக்களை ஸ்டாலின் ஏமாற்றுகிறார். 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தை, ஏழை மக்களுக்கு கொடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுகிறார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் நானே பேசினேன். அப்போது, 'இந்த திட்டம் தொடர்பான முறையான கணக்கை தமிழக அரசு காட்டவில்லை; அதனால், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை' என்றார்.
'தமிழகத்தின் நலனுக்காக, நிதியை நீங்கள் விடுவித்துதான் ஆக வேண்டும்' என நாங்கள் கோரிக்கை வைத்ததும், அதை ஏற்று நிதி விடுவிக்கப்பட்டது. இப்படித்தான், எல்லா திட்டங்களிலும் ஏழைகள் வயிற்றில் அடிக்கும் அரசாக, ஸ்டாலின் அரசு செயல்படுகிறது.
இங்கு கொடி பறக்கிறது, காரணம் காற்று. காற்று கண்ணுக்குத் தெரிவதில்லை. இப்படி கண்ணில் பார்க்க முடியாத விஷயங்களில் கூட ஊழல் செய்கிறவர்கள் தான் தி.மு.க.,வினர்.
தி.மு.க.,வுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்து விட்டது. அந்த காரணத்தால், மக்களை குழப்பி பத்திரிகைகளில் பேட்டி அளிப்பதற்கென்றே, நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூடுதல் தலைமைச் செயலர் அமுதா, 1.5 கோடி பேரிடம் மனு வாங்கினோம். அதில், 1.1 கோடி மனுவுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அப்படியென்றால், எந்தெந்த மனுவுக்கு தீர்வு காணப்பட்டது என்ற விபரத்தையும் சொல்ல வேண்டும்.
யார் தவறாக தகவல் சொன்னாலும், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் பொதுவானவர்களாகத்தான் செயல்பட வேண்டும். உண்மையை மட்டுமே பேச வேண்டும். தி.மு.க.,வுக்கு உடந்தையாக இருக்காதீர்கள்.
தி.மு.க.,தான் முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க.,வில் சேர்ந்து கொள்ளலாம்.
சட்டசபைத் தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம் என, தி.மு.க., கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க., கூட்டணிதான் 210 தொகுதிகளில் வெல்லப் போகிறது.
நான் கள்ளத்தனமாக அமித் ஷாவை சந்தித்ததாக தி.மு.க.,வினர் கூறுகின்றனர். அவர் என்ன பாகிஸ்தானியரா, கள்ளத்தனமாக சந்திக்க?
மக்கள் பிரச்னையை தீர்க்க அமித் ஷா வீட்டு கதவை நாங்கள் தட்டியதால் தான், 100 வேலை நாள் திட்டத்துக்கான பணம் கிடைத்தது. மக்கள் அனைவரும் ஓரணியில் உள்ளனர். தி.மு.க.,தான் வேறு அணியில் உள்ளது.
தி.மு.க.,வில் உறுப்பினராக சேருங்கள் என கெஞ்சி கூத்தாடி பிச்சை எடுக்கின்றனர். அந்த அளவுக்கு இழிவான நிலைக்கு அப்பாவும், மகனும் சென்று விட்டனர்.
தி.மு.க.,வில் உறுப்பினராக சேராதவர்களுக்கு உரிமைத்தொகை நிறுத்தப்படும் என கூறுகின்றனர். அவர்கள் நிறுத்தினால், யாரும் கவலைப்பட வேண்டாம்; நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உடனே வழங்குவோம். நிறுத்தப்பட்ட மாதத்துக்கும் சேர்த்து வழங்குவோம்.
தேர்தலில் அ.தி.மு.க., தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். நாங்கள் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். ஸ்டாலினுக்கு பை பை சொல்வோம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.

