தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/ப்ரீமியம்/ எரிவாயு கொள்முதல்: நெருக்கடியை குறைத்த இந்தியா

 எரிவாயு கொள்முதல்: நெருக்கடியை குறைத்த இந்தியா

 எரிவாயு கொள்முதல்: நெருக்கடியை குறைத்த இந்தியா

11


UPDATED : ஏப் 05, 2026 04:41 AM

ADDED : ஏப் 05, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

11

UPDATED : ஏப் 05, 2026 04:41 AM ADDED : ஏப் 05, 2026 03:22 AM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கத்தாரின் ராஸ் லபான் ஹைட்ரோ கார்பன் ஆலை வளாகத்தில் ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதல், அந்த பகுதியை மட்டும் அல்ல, உலகையே உலுக்கியது. காரணம், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எல்.என்.ஜி., எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு இந்த வளாகத்தில் இருந்து தான் வெளிவருகிறது.

தனது எல்.என்.ஜி., தேவையில் 40 சதவீதத்தை கத்தாரில் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவுக்கும், இது பேரிடியான செய்தியாக அமைந்தது. கத்தாரின் முக்கிய எரிவாயு ஆலை தாக்கப்பட்டது, சமையல் காஸ் நெருக்கடி வாயிலாக சாமானிய இந்தியரின் சமையல் அறை வரை எதிரொலித்து இருக்கிறது.

போதாத குறைக்கு, தங்கள் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு, கச்சா எண்ணெய் உலகின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் கட்டுக்குள் வைத்துக்கொண்டு, அங்கு சரக்கு போக்குவரத்தை கிட்டத்தட்ட முடக்கியது.

Image 1558752
கத்தாரே கதியானது

இந்த இக்கட்டான சூழலில்தான், நாட்டின் உயிர் நாடிகளில் ஒன்றாகி விட்ட எரிவாயு வினியோகத்துக்காக நாம் கத்தார் என்ற ஒற்றை நாட்டை சார்ந்து இருக்கும் பரிதாப நிலையை நினைத்து நொந்துகொள்ள தோன்றும்.

ஆனால், நமது கடந்த கால வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்த்தால், அப்போதைக்கு இப்போதைய நிலைமை எவ்வளவோ மேல் என்று சொல்ல தோன்றும். ஆம், கடந்த 2010 முதல் 2014 வரை, தனக்கு தேவையான கிட்டத்தட்ட எல்லா எரிவாயுவையும் (அதாவது 90 சதவீதம் வரை ) கத்தாரில் இருந்து தான் இந்தியா இறக்குமதி செய்து வந்தது. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும் பகையால், எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற பதற்றம் நிறைந்த பகுதியில், அப்போதைய இந்திய அரசு எரிவாயுவுக்காக இப்படி ஒரே நாட்டை நம்பி இருந்தது வர்த்தக நோக்கில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், நீண்டகால வியூக நோக்கில் அது நம் எரிசக்தி பாதுகாப்பை பாதகமான சூழலில் தான் வைத்து இருந்தது.

பரவலாக்கிய அரசு

ஆனால், பிறகு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எரிவாயுவுக்காக கத்தாரை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து இந்தியாவை விடுவிக்க, கொஞ்சம் கொஞ்சமாக காய்களை நகர்த்தி யது.

மோடி பதவி ஏற்றபோது 86 சதவீதமாக இருந்த கத்தார் எரிவாயு இறக்குமதி, அடுத்த ஆண்டே 62 சதவீதமாக குறைக்கப்பட்டது. அந்த ஒரே ஆண்டில், இந்தியா தனது எரிவாயு கொள்முதல் ஆர்டர்களை ஆஸ்திரேலியா, நைஜீரியா, கினியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளித்தது.

இதனால், கத்தாரில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த எரிவாயுவின் பங்களிப்பு 2017ல் 51 சதவீதமாக குறைந்தது. 2020ல் அது இன்னும் சுருங்கி 39 சதவீதமாக ஆனது. அதாவது, ஐந்தே ஆண்டுகளில் எரிவாயுவுக்கான இந்தியாவின் கத்தார் சார்பு நிலை பாதியாக சரிந்தது.

இந்த காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, நைஜீரியா, கினியா நாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு அமெரிக்காவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் எல்.என்.ஜி., ஏற்றுமதி ஜாம்பவான்களாக உருவெடுத்தன. கத்தார் சார்பு நிலையில் இருந்து இன்னும் விடுபட, இந்தியாவுக்கு இது ஒரு வாய்ப்பாக இருந்தது. அந்த இரு நாடுகளில் இருந்தும் எரிவாயு வாங்க துவங்கியது இந்தியா.

கொரோனா தடுத்தது

அந்த அருமையான தருணத்தில்தான் கொரோனா வந்து உலகை வாட்டியது. சர்வதேச எரிபொருள் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியாவும், தனது எல்.என்.ஜி., கொள்முதல் பரவலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு ஆட்டிப்படைத்துவிட்டு கொரோனா போனது. இந்தியா சுதாரித்து எழுவதற்குள், அடுத்து இன்னொரு இடி விழுந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர். இந்த படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலை நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. அதில் முக்கியமானது, ரஷிய எரிவாயு மீதான தடை.

இதன் விளைவாக, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் எரிவாயு ஐரோப்பிய மண்டலத்துக்கே போதுமானதால், இந்தியா வேறு வழி இல்லாமல் கத்தாரிடம் திரும்பியது. இந்தியாவின் கத்தார் எரிபொருள் சார்பு மீண்டும் 52 சதவீதமானது.

வெற்றி கிடைத்தது

இருந்தாலும், தனது முயற்சியில் இருந்து சற்றும் மனம் தளராத இந்தியா, இதனை 40 சதவீதத்துக்கு மறுபடியும் இறக்கியது. இதனால், இப்போது வந்துள்ள மேற்காசிய போர் காரணமாக கத்தார் வினியோகம் முடங்கினாலும், அதன் பாதிப்பு இந்தியாவுக்கு சற்று குறைவாக உள்ளது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி போக்குவரத்து தேக்கம் போன்ற பிற காரணங்களால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்ந்து அச்சுறுத்தலில் தான் உள்ளது.

ரஷ்யா மீதான தடை முற்றிலும் அகன்றால், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி இந்தியா, சீனா போன்ற எரிவாயு பெரும்பசி கொண்ட நாடுகளும் பலன் அடையும். அதற்கான காலம் விரைவில் கனியும் என்று எதிர்பார்ப்போம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us