பெண்களுக்கு சமத்துவம், உரிமை கிடைப்பதற்கு பொது சிவில் சட்டம்!: ஐகோர்ட் பரிந்துரை
பெண்களுக்கு சமத்துவம், உரிமை கிடைப்பதற்கு பொது சிவில் சட்டம்!: ஐகோர்ட் பரிந்துரை
ADDED : ஏப் 06, 2025 11:16 PM

பெங்களூரு: ஜாதி, மத பேதமில்லாமல், குடும்ப சொத்து உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு சமத்துவமும், உரிய உரிமையும் கிடைப்பதற்கு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும், கர்நாடக உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த முஸ்லிம் தம்பதியான ஷானாஸ் பேகம், சிராஜுதீன் மேக்கி, 2010ல் சொத்து வாங்கியுள்ளனர். இருவரும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
கணவரின் ஓய்வூதிய பலன்கள் மற்றும் மனைவியின் சேமிப்புகளை சேர்த்து கூட்டாக இந்த சொத்து வாங்கிஉள்ளனர்.
கடந்த, 2014ல் ஷானாஸ் பேகம் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி, சொத்தில் பங்கு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.
பாகுபாடு
இது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஹன்சாடே சஞ்சீவ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
கணவர் மற்றும் மனைவி இணைந்துதான் இந்த சொத்தை வாங்கியுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, பெண் ஒருவர் வாங்கும் சொத்தில், அவருடன் பிறந்தவர்களுக்கும் பங்கு உண்டு.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது, இறந்த பெண்ணின் கணவருக்கு, சொத்தில், 75 சதவீதம் உரிமை உள்ளது. மீதமுள்ள 25 சதவீதத்தில், இரண்டு சகோதரர்களுக்கும் தலா, 10 சதவீதம் மற்றும் சகோதரிக்கு, 5 சதவீதம் பங்கு அளிக்க வேண்டும்.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, ஆண்களுக்கு அதிக பங்கும், பெண்களுக்கு குறைந்த பங்கும் வழங்கப்படுகிறது. சகோதர, சகோதரிகளுக்கு இடையே இவ்வாறு பாகுபாடு உள்ளது.
அதே நேரத்தில், ஹிந்து சட்டங்களில், சகோதரன் மற்றும் சகோதரிக்கு சம உரிமை, சம பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்களுக்குள் எந்த பேதமும் கிடையாது.
நம் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும், ஜாதி, மதம் பேதமில்லாமல் சமத்துவம், சம உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டியது அவசியம் என்பதை இந்த வழக்கு நமக்கு காட்டுகிறது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை, அரசியலமைப்புச் சட்டத்தின், 44வது பிரிவு கூறுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் கூறப்பட்டுள்ளதுபோல், இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசில், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய, பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.
சம உரிமை
பெண்களுக்கு, ஜாதி, மதம் பேதமில்லாமல், சமத்துவம், சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதையே, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும், பொது சிவில் சட்டத்தை ஆதரித்துள்ளன.
ஏற்கனவே, உத்தரகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உரிய முடிவுகள் எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகல், மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் முதன்மை சட்டச் செயலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அவர்கள் முடிவு எடுக்கலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

