UPDATED : ஜன 02, 2025 07:36 AM
ADDED : ஜன 01, 2025 10:54 PM

'நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்' என்ற பாட்ஷா படத்தின் வசனத்துடன், நடிகர் ரஜினி அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கில புத்தாண்டையொட்டி, ரஜினியை சந்திப்பதற்காக, அவரது ரசிகர்கள் நேற்று காலை, சென்னை போயஸ் கார்டனில் உள்ள, அவரது வீட்டின் முன்பு திரண்டனர்.
வாசலுக்கு வந்து, அங்கு கூடியிருந்த ரசிகர்களை நோக்கி, தன் இரு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, ரஜினி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பின், ரஜினி வெளியிட்ட அறிக்கையில், 'நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான்; ஆனால், கை விட்டு விடுவான்.
புத்தாண்டு நல்வாழ்த்துகள்' என, கூறியுள்ளார். பாட்ஷா படத்தில், தான் பேசிய வசனத்தை, திடீரென ரஜினி புத்தாண்டு வாழ்த்து கூற பயன்படுத்தி உள்ளது, பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வசனத்தை அரசியல் ரீதியாக சொன்னாரா அல்லது சினிமா பாணியில் பேசினாரா என்ற குழப்பம், ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அவர் தி.மு.க., ஆட்சியை விமர்சித்துஉள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், திரைத்துறையில் அஜித் நடித்த, விடாமுயற்சி படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அஜித்திற்கு ஆதரவாக அதை கூறியதாகவும் ஒரு கருத்து உள்ளது.
ரஜினி மறைமுகமாக யாரை நல்லவர் என்கிறார்; யாரை கெட்டவர் என்கிறார் என்ற கேள்வி, அரசியல் கட்சியினரிடம் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், ரஜினியை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சந்திப்பு குறித்து பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர், தொலைபேசியில் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடியும், ரஜினியும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று மாலை தேனியில் இருந்து, ரஜினியை சந்திக்க அவசரமாக விமானத்தில் சென்னை வந்தார். இருவரும் 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
அரசியல் குறித்து, இருவரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பா.ஜ., தலைமையில், வலுவான கூட்டணி அமைய வழிவகுக்கும்.
இரட்டை இலை விவகாரம், தேர்தல் கமிஷனில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -