நடப்பா ண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில்
நடப்பா ண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில்
ADDED : டிச 14, 2024 02:24 AM

புதுடில்லி: நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பர் மாத இறுதி நிலவரப்படி, அமெரிக்க டாலர் மதிப்பில், நடப்பாண்டில் மட்டும் தங்கத்தின் விலை 28 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்சமாகும். இந்திய ரூபாயின் மதிப்பில் 30 சதவீதம் உயர்ந்து 7,300 ரூபாயை எட்டியுள்ளது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது தங்கத்தின் இருப்பை அதிகரித்ததும், முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் வாங்கியதுமே இதற்கான முக்கிய காரணம். நுகர்வோர் தேவை குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்பை இவை ஈடு செய்தது மட்டுமல்லாமல், விலை உயர்வுக்கும் வழி வகுத்தன.
நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், மத்திய வங்கிகள் 694 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இது, கடந்த 2022ம் ஆண்டு இருந்த நிலவரத்தை பிரதிபலிக்கிறது. புவிசார் அரசியல் சூழலில் நிலவும் நிச்சயமற்ற சூழல் மற்றும் பங்குச் சந்தைகளில் காணப்படும் திடீர் ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக, தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருந்ததால், முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்தனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு டிரம்ப்பின் கொள்கை முடிவுகளால், உலக பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளில் ஏற்படக்கூடிய தாக்கம்; உலகிலேயே தங்கத்தின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவின் போக்கு ஆகியவையே தங்கத்தின் விலையை தீர்மானிக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 அக்டோபர் நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கி 77 டன் தங்கம் வாங்கியது
துருக்கி மத்திய வங்கி 72 டன் தங்கமும்; போலந்து மத்திய வங்கி 69 டன் தங்கமும் வாங்கின.