UPDATED : ஜன 07, 2024 04:54 AM
ADDED : ஜன 07, 2024 02:08 AM

சுவைமிக்க முக்கனிகளும் விளையும் சேலம் மாவட்டத்தின் சேலம் மேற்கு, சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு சட்டசபை தொகுதிகளில், 'என் மண்; என் மக்கள்' பாதயாத்திரை பயணித்தபோது, தமிழகத்தில் மோடியின் நல்லாட்சி வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், பொது மக்கள் பெரும் திரளாகக் கூடி அளித்த வரவேற்பில் நெகிழ்ந்து போனேன்.
சேலம் கத்தரிக்காய்
சேலம் கோனேரிப்பட்டியில், ரோம பேரரசின் வெள்ளி நாணயங்கள் கிடைத்ததை வைத்து பார்க்கும்போதே, இந்தப் பகுதி சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெருந்தொழில் நகரம் என்பது உறுதியாகிறது. விவசாயம், நெசவு, கனிமவளம், இயந்திர உற்பத்தி என, எல்லாத் துறையிலும் சேலம் உயர்ந்து விளங்குகிறது.
தரமான பட்டுநுால் தயாரிப்பு, உலகப் புகழ்பெற்ற மல்கோவா மாம்பழம், இரும்பு உற்பத்தி என தொழில் நகரமாகவும் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், நம் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிய சேலம் ஜவ்வரிசியால் புகழ் பெற்றது.
சேலம் மாம்பழம், சேலம் கத்தரிக்காய் மற்றும் சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழக பா.ஜ., முன்னெடுத்து செல்லும்.
மூன்றாவது இடம்
தென் மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட போது, முதல்வர் ஸ்டாலின், 'இண்டியா' கூட்டணி பேச்சுக்கு டில்லி சென்றிருந்தார். அங்கு பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், 'ஹிந்தி கற்றுக் கொள்ளுங்கள்' என்று முதல்வர் ஸ்டாலினையும், டி.ஆர்.பாலுவையும் பார்த்துக் கூறுகிறார். கடந்த 60 ஆண்டுகளாக, வட மாநில மக்கள் மீது வெறுப்பை விதைத்தார்கள். இன்று உத்தரப் பிரதேச மாநிலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக மாறியிருக்கிறது. தமிழகம், மூன்றாவது இடத்துக்குப் போய் விட்டது.
எந்தத் தகுதியும் இல்லாமல், ஒரு குடும்பத்தில் பிறந்ததை மட்டுமே தகுதியாக வைத்து, பதவிக்கு வரும் தி.மு.க., அமைச்சர்களால், தமிழகத்தில் 13,000 பள்ளி வகுப்பறைகள், கட்டடங்கள் இல்லாமல் மரத்தடியிலும், வெட்டவெளியிலும் செயல்படுகின்றன.
அதற்கு நிதி இல்லை. ஆனால், 'நீட்' தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். நியாயமாக, தி.மு.க., ஊழல் ஆட்சியை 'டிஸ்மிஸ்' செய்யத்தான் பொது மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.
மோசமான கல்வித் தரம்
காசி தமிழ்ச் சங்கமத்தில், பிரதமர் பேசும்போது, அவரது உரையை தமிழில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்திருந்தார். காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம், திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்பது என, தமிழ் மொழியின் பெருமையை, பிரதமர் உலகறியச் செய்கிறார்.
ஆனால் தி.மு.க., 60 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை. தமிழ் மொழித் தேர்வில், 55,000 மாணவர்கள் தோல்வியடையும் நிலையில்தான் கல்வித் தரம் மோசமாக இருக்கிறது.
பிரதமர் மோடியின், கடந்த ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், உலக அரங்கில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்திய நாடு, தற்போது 5வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்துள்ளது. வரும் 2028ம் ஆண்டில் உலகில் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.
வளரும் பாரதம், வளர்ச்சியடைந்த பாரதம், விக்ஸித் பாரத் என்று மோடி, 2047ம் ஆண்டு, நம் நாடு உலகத்தின் முதன்மைப் பொருளாதார நாடாக மாற, திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
கள்ளுக்கடை திறப்பு
தமிழகத்தில் 5 பேரில் ஒருவர் மதுவுக்கு அடிமை. அது, தி.மு.க.,வுக்கு வருமானம். மதுவின் கோரமுகம், ஒவ்வொரு வீட்டுக்கும் வர ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் மதுவால் ஏற்படும் மரணங்கள் அல்லாது, குற்றச் சம்பவங்களும் அதிகரித்து விட்டன.
பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், முதல் ஆண்டு 33 சதவீதமும், இரண்டாம் ஆண்டு 33 சதவீதமும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குள் மொத்த கடைகளும் மூடப்படும். எரிசாராய விற்பனை இல்லாமல், விவசாயிகள் பயனடையுமாறு கள்ளுக் கடைகள் திறக்கப்படும்.
வரும் லோக்சபா தேர்தலில், கட்சி வித்தியாசம் இல்லாமல், நாட்டின் நலனுக்காக நம் பிரதமருக்கு ஒவ்வொருவரும் ஓட்டளிக்க வேண்டும்.