'அரசே... ஆலயத்தை விட்டு வெளியேறு' முதல்வரிடம் மனு அளிக்க வி.எச்.பி., திட்டம்
'அரசே... ஆலயத்தை விட்டு வெளியேறு' முதல்வரிடம் மனு அளிக்க வி.எச்.பி., திட்டம்
ADDED : செப் 24, 2025 04:23 AM

சென்னை: 'அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தை வலியுறுத்தி மனு அளிப்பதற்காக, முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு, அந்த அமைப்பின் நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிஷத் எனும் வி.எச்.பி.,யின் அகில பாரத பொதுக்குழு கூட்டம், மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில், கடந்த ஜூலையில் நடந்தது.
அதில், 'நாடு முழுதும் உள்ள ஹிந்து கோவில்கள், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்; ஆலயத்தை விட்டு அரசு வெளியேற வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளில், வி.எச்.பி., இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள், முதல்வர்களை நேரில் சந்தித்து, 'அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு' என்ற தீர்மானத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மனு அளித்து வருகின்றனர்.
அதன்படி, தென் மாநிலங்களின் கவர்னர்கள், முதல்வர்களை, வி.எச்.பி., அகில உலக இணைப் பொதுச்செயலர் ஸ்தாணுமாலயன் சந்தித்து வருகிறார். சமீபத்தில், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது:
மதம், கடவுள் மீது நம்பிக்கையில்லாதவர்கள், அரசை வழிநடத்துபவர்களாக உள்ளனர். எனவே, மதச்சார்பற்ற அரசின் பிடியில் கோவில்கள், அதுவும் ஹிந்து மத கோவில்கள் மட்டும் இருப்பது நியாயமற்றது. இது, நம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை மத வழிபாட்டு உரிமைக்கு எதிரானது.
ஹிந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, மதச்சார்பற்ற அரசு, மதச்சார்புள்ள கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்புகளில் இருந்து வெளியேற வேண்டும் என, வி.எச்.பி., அகில பாரத கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்த வலியுறுத்தி, அனைத்து மாநில கவர்னர்கள், முதல்வர்களை சந்தித்து, மனு அளித்து வருகிறோம். புதுச்சேரி, கோவா, ஆந்திரா மாநில கவர்னர்கள், முதல்வர்களை சந்தித்து மனு அளித்தேன். இந்த தீர்மானம் குறித்து, அவர்களுடன் விரிவாக கலந்துரையாடினேன்.
கோவாவில் கோவில்கள் அரசிடம் இல்லை. புதுச்சேரியில் கோவில்கள் அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக கவர்னர் ரவியை, விரைவில் சந்திக்க இருக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டு, கடிதம் அனுப்பியுள்ளோம். கோவில்கள் தொடர்பாக, அரசை வழிநடத்துபவர்களுடன் உரையாடுவதன் வாயிலாக, கண்டிப்பாக வி.எச்.பி.,யின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.