சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் அரசுக்கு நெருக்கடி: ரவுடியிசத்தை முழுதும் ஒழிக்க ஸ்டாலின் திட்டம்
சட்டம் - ஒழுங்கு பிரச்னையால் அரசுக்கு நெருக்கடி: ரவுடியிசத்தை முழுதும் ஒழிக்க ஸ்டாலின் திட்டம்
ADDED : ஜூலை 22, 2024 12:42 AM

தமிழகம் முழுதும் ரவுடிகளை முழுமையாக ஒழித்து, சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்த, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதற்காக, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாகவும், போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னையின் பிரதான பகுதியான பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டார்.
குட்டிச்சுவர்
சேலத்தில், தி.மு.க., கவுன்சிலரின் கணவர் கள்ளத்தனமாக ஒரு நம்பர் லாட்டரி விற்றதை, போலீசிடம் போட்டுக் கொடுத்ததால், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டார்.
அமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜன் மதுரை வீட்டருகே, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். கடலுாரில் பா.ம.க., நிர்வாகி ஒருவர் கொல்லப்பட்டார்.
இப்படி அரசியல் பிரமுகர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு, பொதுமக்களில் பலரும் அன்றாடம் வெட்டிக் கொல்லப்படும் நிலை தொடர்கிறது. அந்த அளவுக்கு, சட்டம் - ஒழுங்கு சூழல் குட்டிச்சுவராகி இருக்கிறது. இதற்கு குற்ற நிகழ்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ரவுடிகளுக்கு, போலீசார் மீதான பயம் இல்லாமல் போனதே முக்கிய காரணம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி முதல் ஆளும்கட்சியோடு கூட்டணியாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளும் தமிழக சட்டம் - ஒழுங்கு சூழல் குறித்து கவலையை வெளியிட்டிருந்தன. குறிப்பாக, தமிழகத்தில் 200 நாட்களில் 595 கொலைகள் என பட்டியல் போட்டு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை வெளிப்படுத்தி இருந்தார் பழனிசாமி.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை; ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம், தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் உள்ளிட்டவைகளும், இந்த விவகாரத்தை கையில் எடுத்து விளக்கம் கேட்டுள்ளன.
அதிகாரிகள் மாற்றம்
இப்படி பல முனைகளில் இருந்தும் சட்டம் - ஒழுங்கு குறித்து, தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கடி தொடர்வதால், சரிந்து கிடங்கும் சட்டம் - ஒழுங்கை சரி செய்யும்படி, தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன், ஸ்டாலின் பேசி வருகிறார்.
டி.ஜி.பி., சங்கர் ஜிவால், உளவுத்துறை தலைவர் செந்தில்வேலன், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோரிடம், முதல்வர் ஆலோசனை நடத்தியபின்தான், தமிழகம் முழுதும் உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் நடந்துஉள்ளது. அடுத்தடுத்தும், போலீசில் மாற்றங்கள் வரவுள்ளன.
நல்ல தீர்வு
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் உத்தரவின்படி, தமிழகம் முழுதும் 5,000 ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்களை கைது செய்யும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரவுடிகள் ஒழிப்புப் பிரிவு போலீசார் வேகம் காட்டி வருகின்றனர். கைது நடவடிக்கைகள் தொடரும் என, போலீசார் கூறுகின்றனர். எதிர்ப்பு காட்டுவோரை அடக்கி ஒடுக்க போலீசாருக்கு அடுத்தக்கட்டமாக, ரவுடிகளின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சட்ட ரீதியில் சிக்கும் ரவுடிகள், சேர்த்து வைத்திருக்கும் பணத்தையும், சொத்தையும் வைத்து தப்பி விடுகின்றனர்; மீண்டும் ரவுடித்தனம் காட்டுகின்றனர். அவர்களின் சொத்துக்களை முடக்கினால்தான், இதற்கு நல்ல தீர்வு ஏற்படும் என்ற முடிவுக்கு, தமிழக உளவுத்துறை வந்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுதும் பிரபலமான ரவுடிகளின் பட்டியலோடு, அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம், சொத்து குறித்த விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.
கடும் நடவடிக்கை
ரவுடிகளின் பணத்தை முடக்குவதோடு, உ.பி., அரசு செய்தது போல, அசையா சொத்துக்களை இடித்துத் தள்ளுவது குறித்தும், சட்ட ரீதியிலான ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என, தெரிகிறது.
சட்டம் - ஒழுங்குக்கு சவால் விடும் பிரச்னைகளில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு முக்கியப்பங்கு வகிப்பதால், அவற்றில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஆன் - லைன் மோசடிகள், பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக நடக்கும் தொடர்ச்சியான பொருளாதார மோசடிகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க, அரசு தீவிரமாக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -