தமிழக சுகாதார கட்டமைப்பை பழுதாக்குகிறது அரசு: அண்ணாமலை
தமிழக சுகாதார கட்டமைப்பை பழுதாக்குகிறது அரசு: அண்ணாமலை
ADDED : ஏப் 08, 2025 03:44 AM

சென்னை : 'டாக்டர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல், தி.மு.க., அரசு தமிழக சுகாதாரத் துறை கட்டமைப்பையே பழுதாக்கி கொண்டிருக்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, எப்போதும் தனியாருக்கு ஆதரவாகவும், அரசு கட்டமைப்புகளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, தரமான கல்வி கிடைக்கக் கூடாது என்பதற்காக, தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, தி.மு.க.,வினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கு வருமானம் கிடைக்க, 'நீட்' தேர்வு எதிர்ப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், அரசு டாக்டர்களுக்கான ஊதிய உயர்வு கோரிக்கையை, ஆட்சிக்கு வந்து ஐந்தாம் ஆண்டாக, ஸ்டாலின் கண்டு கொள்ளாமல் உள்ளார்.
அரசு டாக்டர்களுக்கு தரப்படும் ஊதியம், நாட்டிலேயே மிகக் குறைவாகவும் இருப்பதாக, டாக்டர்கள் வேதனைப்படுகின்றனர். போதிய டாக்டர்கள் இல்லாமல் பணிச்சுமையும் அதிகம் இருக்கிறது.
டாக்டர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் புறக்கணித்து, சுகாதார துறை கட்டமைப்பையே, அரசு பழுதாக்கி கொண்டிருக்கிறது.
கொரோனா பேரிடர் பணியில் உயிர் நீத்த அரசு டாக்டர் விவேகானந்தன் மனைவிக்கு, உடனே அரசு பணிக்கான ஆணை வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் காலியிடங்கள் முழுதுமாக நிரப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்ட மற்றொரு அறிக்கை:
உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியனின், சொந்த தொகுதியான, திருவிடைமருதுார், அம்மன்குடி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கட்டடங்கள் இல்லாமல், நான்கு ஆண்டுகளாக மரத்தடியிலும், ஷெட்டுகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்புகள் வரை நடக்கின்றன.
பள்ளிக்கல்வி, உயர் கல்வி என, கல்வித் துறைக்கான இரு அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் உள்ள பள்ளிகளிலேயே கட்டடங்கள் இல்லை.
தி.மு.க., ஆட்சியில், பள்ளிக்கல்வி எவ்வளவு அவல நிலையில் இருக்கிறது என்பதற்கு, இது மற்றுமொரு சான்று.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 5,000 பள்ளிகள் கட்டினோம்; 6,000 பள்ளிகள் கட்டினோம்' என, கதை விட்டுக் கொண்டிருக்கும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை, மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.
எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு நிதியில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்ற வெள்ளை அறிக்கை வெளியிட, அமைச்சருக்கு என்ன பயம்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

