ஆதாயம் தரும் இரட்டை பதவி: சட்டத்தை திருத்த அரசு முடிவு
ஆதாயம் தரும் இரட்டை பதவி: சட்டத்தை திருத்த அரசு முடிவு
ADDED : நவ 18, 2024 12:31 AM

புதுடில்லி: ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்கும் எம்.பி.,க்களை தகுதி நீக்கம் செய்ய வழி செய்யும் சட்டத்தை நீக்கிவிட்டு, தற்போதைய தேவைக்கு ஏற்ப புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து ஊதியம் பெறும் எம்.பி.,க்கள், கவர்னர்கள் உள்ளிட்டோர், அரசியல்சாசன சட்டப்பிரிவு 158(2)ன் கீழ், அரசு ஊதியம் பெறும் மற்றொரு பதவியை வகிக்க முடியாது.
இந்த சட்டம் குறித்து விரிவான ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்கும்படி, எம்.பி., கல்ராஜ் மிஸ்ரா தலைமையில், 16வது லோக்சபாவில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டது.
இந்த கூட்டுக்குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்போரை தகுதி நீக்கம் செய்வதில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான, சட்ட வரைவு மசோதாவை சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டத்திற்கும், தகுதி நீக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கான வெளிப்படையான விதியைக் கொண்ட வேறு சில சட்டங்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை நீக்க அதில் முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக பதவி நீக்கம் செய்ய வழிசெய்யும் சட்டப்பிரிவு 4ஐ நீக்கவும், தேவையான திருத்தங்களை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்போரை தகுதி நீக்கம் செய்யும் 65 ஆண்டுகால பழைய சட்டத்தை நீக்கிவிட்டு, தற்போதைய காலத்துக்கு ஏற்ப புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.